உங்கள் குறைகள் என்ன? நேர்ல வந்து சொல்லுங்க! கெத்து காட்டும் எடப்பாடியார்!

முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் பழனிசாமி


முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் புதிய திட்டத்தை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஆகஸ்ட் 19ம் தேதி சேலம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.

ஜூலை 17ம் தேதி சட்டப் பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு அதிக முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

திங்கள்தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், வெள்ளிதோறும் அம்மா திட்ட முகாம்களும் நடத்தப்படுவதாகவும் தெரிவித்த முதலமைச்சர், விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளுக்கு தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

சட்டப்பேரவையில் அறிவித்தபடி முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை ஆகஸ்ட் 19ம்தேதி சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். 

புதிய திட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட நாளில் அரசு அலுவலர்கள் கொண்ட குழு வார்டுகள், கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அந்த மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு எட்டப்படும்.