பிரம்மன் வந்து தினமும் பூஜை செய்யும் ஆலயம் எங்கு இருக்கிறது தெரியுமா?

கன்னியாகுமரி அருகே உள்ளது சுசீந்திரம். சுசி + இந்திரன் = இந்திரன் சாபம் நீங்கப் பெற்ற இடம்.


இத்தலத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒருங்கே காட்சி கொடுக்கும் (தாண்+மால்+அயன்) தாணுமாலயன் ஆலயம் மிகவும் பிரசித்தமானது. இவ்வாலய திருக்குளம் சகல பாவங்களையும் நீக்க வல்லது. இந்த திருக்குளத்தில் நீராடி தாணுமாலயனை பூஜித்து வந்ததால்தான் இந்திரன் சாப விமோசனம் பெற்றான்.  

இவ்வாலயம் இருந்த இடம் கானகமாக இருந்த பொழுது இவ்வழியே சென்று பால், மோர் விற்கச் சென்ற இடைக்குலப்பெண் ஒருவரை ஒரு மரத்தின் வேர்க்கால் இடறிவிட, தான் கொண்டுவந்த பால், தயிர், பானங்கள், பானைகளோடு உடைந்து போனது., அவள் தனது கணவனை அழைத்து வந்து அந்த வேரை வெட்ட, அதிலிருந்து குருதி பீறீட்டது. அடுத்த கணமே அம்மரத்தில் மும்மூர்த்திகளும் ஒருசேர காட்சி அளித்தனர். அதன் பின்னரே லிங்கமாக தாணுமாலயன் அருள்பாலித்தார். இவ்வாறு கோயில் உருவானது குறித்து வரலாறு சொல்லப்படுகிறது

பிரம்மன் இவ்வாலயத்தில் பூஜை செய்து வருவதாக இன்றும் நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே இங்கு அர்த்தஜாம பூஜை கிடையாது. இந்திரன், நந்தியையும், விக்னேஸ்வரரையும் ஒருங்கே தியானித்ததால் ஆலயத்தில் இந்திர விநாயகர் என்ற ஓர் விநாயகர் சந்நதியும், அவர் முன் நந்திதேவரையும் பார்க்க முடியும்.