நியுஸ் 7 சேனலுக்கு பாண்டே பராக்! வைகுண்டராஜன் – பா.ஜ.க பக்கா டீல்!

பா.ஜ.க – வைகுண்டராஜன் இடையிலான டீல் பக்காவாக முடிந்ததை தொடர்ந்து நியுஸ் 7 சேனலின் தலைமை செய்தி ஆசிரியராக ரங்கராஜ் பாண்டே விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.


தந்தி தொலைக்காட்சியில் ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசி போல் செயல்பட்ட ரங்கராஜ் பாண்டே அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதாவது தந்தை குழுமம் எப்போதுமே மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுடன் நெருக்மான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் இணக்கமாக இருப்பது வழக்கம். அந்த வகையில் தந்தி தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக இருந்த பாண்டேவும் பா.ஜ.க தரப்புடன் நெருக்கமாகவே இருந்து வந்தார்.

   ஆனால் ஒரு கட்டத்தில் பாண்டே – பா.ஜ.க இடையிலான நெருக்கம் தந்தி குழும உரிமையாளர் – பா.ஜ.கஇடையிலான நெருக்கத்தை விட அதிகமானது. இதனால் கடந்த ஏழு எட்டு மாதங்களாகவே பாண்டேவை கட்டுப்படுத்த தந்தி நிர்வாகம் முயற்சி செய்தது. முடியாத நிலையில் ஏற்கனவே ஒரு முறை பாண்டேவை வீட்டுக்கு அனுப்பி வைத்தது தந்தி நிர்வாகம். ஆனால் மத்தியில் மிகப்பெரிய துறையை கவனித்து வரும் பெண் அமைச்சர் ஒருவரால் பாண்டேவுக்கு மறுவாழ்வு கிடைத்தது.

   ஆனால் கடந்த மாதம் ஏற்பட்ட பிரச்சனையின் போது அந்த பெண் மத்திய அமைச்சர் எவ்வளவோ கூறியும் தந்தி நிர்வாகம் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.இதனால் பாண்டே தந்தி டிவியில தனது வேலையை இழந்துவிட்டார். இருந்தாலும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தங்களின் விசுவாசியான பாண்டே ஏதேனும் ஒரு தொலைக்காட்சியில் பணியில் இருக்க வேண்டும் என்பது பா.ஜ.க மேலிடத்தின் விருப்பம்.

  இதற்காக பா.ஜ.க தன்னுடைய தொடர்புகளை கொண்டு தமிழகத்தில் நம்பர் ஒன் தொலைக்காட்சியான பாலிமரில் பாண்டேவை நுழைக்க முயற்சி செய்தது. ஆனால் அந்த தொலைக்காட்சி உரிமையாளரோ தங்கள் டிவியில விவாதங்களுக்கு இடமில்லை என்று கூறி அந்த பேச்சையே கிடப்பில் போட்டுவிட்டார். இதன் பிறகு வேறு சில தொலைக்காட்சிகளில் பாண்டேவை புகுத்த தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் நியுஸ் 7 தொலைக்காட்சியுடன் டீல் முடிந்து பாண்டேவை அங்கு பணியில் அமர்த்தியுள்ளனர்.

   அதாவது அண்மையில் நியுஸ் 7 உரிமையாளர் வைகுண்டராஜன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அந்த சோதனையை தொடர்ந்து வைகுண்டராஜன் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர்.இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தளர்த்திக் கொள்வதற்கு பிரதிபலனாக பாண்டேவை நியுஸ் 7 தொலைக்காட்சியில் பணியில் அமர்த்த கேட்டுக் கொள்ளப்பட்டது.

  இதற்காகவே காத்திருந்த வைகுண்டராஜன் தரப்பு உடனடியாக பாண்டேவுக்கு வேலையை கொடுத்து வருமான வரித்துறை கெடுபிடியில் இருந்து தப்பித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே பாண்டே பராக்.. பராக்.. என்று ஒரு விளம்பரத்தை நியுஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. உண்மையில் அது ஒரு நேர்காணலுக்கானது என்று  அந்த தொலைக்காட்சியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

   இருந்தாலும் விரைவில் நியுஸ் 7 தொலைக்காட்சியில் பணியில் அமர்வதற்கு முன்னதாக ஒரு நேர்காணல் கொடுத்து அசத்த பாண்டே முடிவு செய்துள்ளார். இதன் மூலம் பாண்டேவை மீண்டும் தொலைக்காட்சியில் ரசிகர்கள் பார்க்கலாம்.