தஞ்சை அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் உயிர் இழப்புகள்..! பாஷை தெரியாத பயிற்சி மருத்துவர்கள் காரணமா?

ஊழியர்கள் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை.


1965ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசின் முதலமைச்சர் பக்தவச்சலம் அவர்களால் தொடங்கப்பட்டது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

தஞ்சை கும்பகோணம் பட்டுக்கோட்டை புதுக்கோட்டை மற்றும் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட மக்கள் அவசர மற்றும் ஆபத்துகால சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.

தஞ்சையில் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்தாலும். பல்நோக்கு வசதிகளைக் கொண்டது இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. தினசரி சுமார் 10 ஆயிரம் புற நோயாளிகள் 8 ஆயிரம் உள் நோயாளிகள் மட்டுமின்றி.

15 ஆயிரம் பார்வையாளர்கள் என 33 ஆயிரம் பேர் வருகை தருகின்றனர் இந்த மருத்துவக் கல்லூரிக்கு. அதுமட்டுமின்றி இங்குள்ள அவசர விபத்து பிரிவில் தினமும் சராசரியாக 50 முதல் 100 பேர் வரையில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கொண்டுவரப்படுகிறார்கள் என்கிறார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர்.

இப்படி பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்தும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை கவனித்துக் கொள்ள சரியான விகிதத்தில் ஆள்டகள் இல்லை என்றும். ஊழியர்கள் பற்றாக்குறையால் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்க முடியாமல் பல பேர் உயிரிழந்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டுகின்றனர் பொது மக்கள். 

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் குடும்பத்தினர் நடத்தி வரும் பத்மாவதி ஹாஸ்பிடாலிடி நிறுவனம் மூலமாக. இங்கு பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஆனால் தேவைக்கும் குறைவாக சுமார் 350 ஊழியர்களை மட்டுமே பத்மாவதி நிறுவனம் கொடுத்துள்ளதாகவும். ஊழியர்கள் பற்றாக்குறையை சமாளித்து கொள்ளும்படியும் அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுவதாக தெரிவிக்கிறார் பெயர் சொல்ல விரும்பாத மருத்துவமனை ஊழியர் ஒருவர்.

அந்த நிறுவனத்தைப் பற்றி புகார் கொடுக்க யாரும் தயாராக இல்லை என்றும். மீறியும் அவர்கள் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில். அந்த நபர்கள் மீதே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.  அதனால். நாங்கள் இதைப்பற்றி யாரிடமும் பேச முடியவில்லை என்கின்றார் மற்றொரு ஊழியர். மேலும். இங்கு செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டரில் அவசரத்திற்கு ஸ்கேன் எடுக்க கூட ஆட்கள் இல்லை எனவும். ஐசியூ நோயாளிகள் கூட இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்கின்றனர் பொதுமக்கள்.

பொதுவாக அரசு மருத்துவமனை என்றாலே. அலட்சியம் மற்றும் அனைத்து சேவைகளுக்கும் பணம் பிடுங்குவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மருத்துவமனையும் இதில் விதிவிலக்கல்ல.

உள் நோயாளிகள் அனுமதிக்கப்படுள்ள கட்டிடத்தின் வாசலில் நிற்கும் வாட்ச்மேன் முதற்கொண்டு ஸ்டெச்சர் தள்ளும் ஊழியர்கள் வரை பணம் கொடுத்தால் தான் தங்களது வேலையையே செய்கின்றனர் என்பது அனைத்து தரப்பினரின் குற்றச்சாட்டு. 

ஒருகாலத்தில் தஞ்சாவூர் மருத்துவமனைக்கு குற்றுயிராக கொண்டுவந்தாலே காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தஞ்சையின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில். சமீபகாலமாக அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும். பயிற்சி மருத்துவர்கள் பலர் வேற்று மாநிலத்தவர்களாக இருப்பதால். மொழிப்பிரச்சினையால். நாங்கள் என்ன கூறுகிறோம் என்று தெரியாமல். அவர்களுக்கு புரிந்தவரைக்குமே மருத்துவ வசதிகளை செய்கின்றனர் எனவும். 

பாஷை புரியவில்லை எனும் பட்சத்தில் மரணம் தான் இந்த மருத்துவமனையின் பரிசாக கிடைக்கிறது என்று குமுறுகின்றனர் .  இந்த செய்தி சேகரிக்கப்பட்ட இதே நேரத்தில். பழைய கட்டிடத்தில் இயங்கி வரும் எக்கோ ஸ்கேன் பிரிவில் சிறு குழந்தைகளோடு பலர் காத்திருந்தனர்.

அவர்களை அணுகி விபரம் கேட்டபோது. எக்கோ ஸ்கேன் எடுக்கும் மருத்துவர் வரவில்லை என்றும். காலை 8 மணி முதல் காத்திருப்பதாக கூறுகின்றார் தஞ்சாவூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த முகம்மது யூசுப். பெரம்பலூர் மாவட்டம் தங்கசாலை ஊரிலிருந்து வந்துள்ள தேன்மொழி எனும் பெண்மணி.

மருத்துவ வசதிகளை எதிர்பார்த்து தான் இவ்வளவு தூரம் வந்துள்ளோம். ஆனால் கடந்த மூன்று நாட்களாக எக்ஸ்ரே. ஸ்கேன் எடுக்க அலைய விடுகிறார்களே தவிர. என்ன வியாதி. என்ன மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என்று கூற சரியான வழிகாட்டுதலுக்கு இங்கு ஆளில்லை.  மீறியும் கேட்டால் வாய்க்கு வந்த படி திட்டுகிறார்கள் என்கிறார் இந்த பெண்மணி.

300 படுக்கையறை கட்டிடத்தின் பின் பகுதியில். 2016.17 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்படி பார்வையாளர்கள் ஓய்வு அறை கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக புதிய கட்டிடத்தின் தகவல் பலகையில் கூறப்பட்டுள்ளது. 

ஆனால். இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல். உட்பூச்சு பணிகளே முடியாமல் இருக்கிறது அந்த கட்டிடத்தில். இதுகுறித்து விரிவாக பேச. மருத்துவமனையின் டீன் திருமதி குமுதா லிங்கராஜ் அவர்களை தொடர்புகொள்ள முயற்சித்தோம். அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் கலந்து கொள்ள போய்விட்டார் என்றும்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து வாருங்கள் என்று நம்மை வெளியே அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர் ஊழியர்கள். தரணி ஆண்ட தஞ்சையின் தலைமை மருத்துவத்துறை. கோமா நிலைக்கு சென்று கொண்டிருப்பதை கண் கூடாக பார்த்துவிட்டு கணத்த இதயத்தோடு புறப்பட்டு சென்றோம்.

மணியன் கலியமூர்த்தி