தொட்டதெல்லாம் துலங்கச்செய்யும் தைப்பூச திருநாள்..! முருகப்பெருமான் இருக்க பயமேன்?

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச திருநாள். தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும்.


இவ்வாண்டு தைப்பூசம் வருகின்ற சனிக்கிழமை (08.02.2020) தை மாதம் 10-ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தின் சிறப்புகள் : தைப்பூச நாளில் வள்ளலார் முக்தியடைந்தார். இறைவன் ஒளிமயமானவர் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். தைப்பூச தினத்தன்று அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராஜப்பெருமான் சிவதாண்டவமாடிக் காணும்படி செய்த நாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றது. அத்துடன் வாயுபகவானும், வர்ணபகவானும், அக்னி பகவானும் சிவபிரானின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகின்றது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே உள்ளமையை உணர்த்தப்பட்ட புண்ணிய நாள்தான் இந்த தைப்பூச நன்னாளாகும்.

ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாக சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், புதிர் எடுத்தல், புதி துண்ணல், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்களை மேற்கொள்கின்றனர்.

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு, ருத்ராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். பின்பு தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். தைப்பூசத்தன்று உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச விரதத்தை கடைபிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்.

சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.