நாளை தை கிருத்திகை..! முருகப் பெருமானை மறக்காதீங்க

மாதந்தோறும் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் முருகப்பெருமானுக்குரிய விசேஷ தினமானது.


அதிலும் உத்தராயணத்தின் தொடக்கமான தை மாத கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன தொடக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷமானது. கிருத்திகை விரதம் மூன்று நாட்கள் தொடர்புடையது. கிருத்திகைக்கு முதல் நாள் பரணி நட்சத்திரத்தின் பின்னேரத்தில் சிறிது உண்டு, அன்று கந்த புராணம் உள்ளிட்ட முருகன் துதி நூல்களை ஓத வேண்டும்; அன்று முழுதும் உண்ணவும் கூடாது! உறங்கவும் கூடாது!

அடுத்த நாள் அதிகாலை “உரோகிணி’ நட்சத்திரத்தில் எழுந்து இனிய புனலாடி, மனமார வள்ளி மணவாளனை நினைந்து, பின் ”பாரணை” செய்ய வேண்டும் (பாரணை = சக்தியைக் கொடுக்கும் உணவு) கிருத்திகை விரத சம்பிரதாயம் இவ்வாறு அமைந்துள்ளது. ஆனால் தற்போது விரைந்து செல்லும் காலநடையில், கிருத்திகை விரதம் ஒரு நாள் மட்டுமே பின்பற்றப்படுகிறது.

உத்தராயண புண்ய காலம் என்று போற்றப் பெறும் மாதத் தொடக்கம் தை மாதம் ஆகும். அம்மாதத்தில், அமாவாசைக்கு அடுத்த ஏழாம் நாளன்று, அருணன் என்பவன் சாரதியாக இருந்து ஓட்டும் கதிரவன் தேர், வடக்கு முகமாகத் திரும்புகிறது. அந்நன்னாளே “ரத சப்தமி’ எனப்படுகிறது. இந்தப் புண்ணிய தினத்துக்கு அடுத்து வரும் நாளே “தை கிருத்திகை’ ஆகும். சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக மலர்வது “தை’ மாதம்.

பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் மால் மருகன் முருகனை மனமார நினைத்து ஏறக்குறைய ஓராண்டு விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும்; கட்டாயம் குழந்தையும் பிறக்கும்என்பது . எனவே தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனும் வாழ்வியல் பழமொழி வருகிறது. இந்தப் பழமொழி, பொங்கலோடும் தொடர்புடையது! தலங்கள் தோறும் தை கிருத்திகை மாதம் தோறும் கிருத்திகை விரதங்கள் வருகின்றன. ஒரு சில மாதங்கள் இரண்டு கிருத்திகைகள் வருவதுண்டு. இதனை “உபரி கிருத்திகை’ என்பார்கள்.

ஆறுமுகனின் ஆறு படை வீடுகளிலும், ஏனைய தலங்களிலும், மற்றும் சைவ சமயம் சார்ந்த சபைகளிலும் தை கிருத்திகை, தனி மகத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது. “அபிஷேகத்துக்குப் பழநி! அலங்காரத்துக்குச் செந்தூர்’ என்பார்கள். திருச்செந்தூரில் தை கிருத்திகை விழாவில் காலையிலும், மாலையிலும் முறையே சண்முக நாதர் சிங்கக் கேடய சப்பரத்திலும், பூங்கோயில் சப்பரத்திலும் திருவீதி பவனி வருவார்.

திருவண்ணாமலை குமரன் கோயிலில், தை கிருத்திகை அன்று அபிஷேக ஆராதனைகள் பெருமளவில் நிகழ்கின்றன. ஆறுமுகன் அடியார்கள் திருக்கூட்டம், அன்று அலைகள்போலத் தொடர்கின்றன. ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப் பெருமான் செவ்வாயின் அம்சம். ஆகையால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் கந்தவேளை வணங்க அனைத்து கவலைகள், பிரச்னைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் சேரும்.

நம்பிக்கையுடன் மனமுருக பிரார்த்தித்து சகல நலங்களும் பெறுவோம் ஆரவாரம் அலைமோதும் தற்கால வாழ்வில், அடிக்கடி முருகக் கடவுளை தரிசிக்க இயலாவிடினும், ஆண்டுக்கொரு முறை, சுடராகப் பொலியும் தை கிருத்திகை நன்னாளிலாவது முருகன் திருநாமங்களை இயன்ற அளவில் மொழிந்து, அவன் எழுந்தருளியுள்ள ஆலயங்கள், சபைகள் சென்று, அவனை அகம் உருகி வழிபட்டு அருளும் பொருளும் பெறுவோமாக!

தெய்வங்களின் திருவருளைப் பெரிதும் பெறுவதற்கு அருந்துணை புரிவன விரதங்கள் ஆகும். முறையாக விரதங்களை மேற்கொண்டு ஒழுகினால் நிறைவான வாழ்வு பெறலாம்..