லடாக் எல்லையில் படைகள் குவிப்பு..! போருக்கு தயாராகிறதா சீனா? மோடி அவசர ஆலோசனை!

லடாக் எல்லையில் சுமார் 5ஆயிரம் வீரர்களை வரை சீனா குவித்துள்ள நிலையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பிரதமர் மோடி ராணுவ தலைமை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.


லடாக் எல்லையில் உள்ள இந்திய பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் கல்வான் எனும் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்காக இந்த சாலை அமைக்கப்படுவதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம் கல்வான் பகுதியில் இந்திய ராணுவம் சாலை அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவின் இந்த எதிர்ப்பை தொடர்ந்தே லடாக்கில் பதற்றம் உருவானது. கடந்த 5ந் தேதி இந்திய ராணுவம் எல்லையில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது அங்கு வந்த சீன ராணுவ வீரர்களுடன்மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கைகளால் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

ஆனாலும் கல்வான் பகுதியில் திடீரென சீன ராணுவம் தனது படை பலத்தை அதிகரிக்கத் தொடங்கியது. சுமார் 5 ஆயிரம் வீரர்கள் வரை அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் இந்திய ராணுவத்திற்கும் - சீன ராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்ட மே 5ந் தேதிக்கு பிறகு கல்வான் பகுதியில் சீன விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வந்திறங்கியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் செயற்கை கோள் புகைப்படங்களும் வெளியாகின. இதற்கிடையே ராணுவத் தளபதி நரவானே கடந்த வாரம் லடாக் சென்று நிலைமையை ஆய்வு செய்து வந்தார். இதற்கிடையே லடாக்கின் கல்வானில் உள்ள சீன ராணுவ முகாமில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சீனாவின் ஜே 11 அல்லது ஜே 16 ரக போர் விமானங்கள் கல்வான் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென இந்தியாவில் இருக்கும் சீன நாட்டினர் வெளியேற சிறப்பு விமானங்களை அந்நாடு இயக்குவதாக அறிவித்தது. இதனால் பதற்றம் அதிகமான நிலையில் இன்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து ராணுவத் தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதௌரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோரையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பிரதமர் இல்லத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மோடியை அவசரமாக சந்தித்தார். தொடர்ந்து முப்படைகளின் தலைமை தளபதியும் பிரதமர் வீட்டிற்கு விரைந்தார்.

இதே போல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவத் தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதௌரியா, கடற்படை தளபதி கரம்பீர் சிங் ஆகியோரும் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். இதனால்பதற்றமான சூழல் நிலவுகிறது.