புதிய வீட்டு கிரஹப்பிரவேசம்..! அடுத்த 2 நாளில் தமிழக வீரருக்கு சீன ராணுவத்தால் ஏற்பட்ட கொடூரம்! கதறித்துடிக்கும் மனைவி!

இந்திய சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் உள்பட 3 பேர் வீர மரணம் அடைந்தனர்.


இந்திய - சீன எல்லையான லடாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே திங்கள்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கழுகூரணி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

சீன ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் பழனி உயிரிழந்ததாகவும், இவரது உடல் புதன்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  

தனது 18 வயதில் ராணுவத்தில் சேர்ந்து லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் கடந்த 22 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பழனிக்கு திருமணமாகி வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா என்ற மகனும்,திவ்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த வாரம் தனது மனைவியிடம் செல்போனில் பேசிய பழனி, அடுத்த சில தினங்களுக்கு பணி அதிகம் என்பதால் பேச முடியாது என தெரிவித்துள்ளார்.

பழனியின் தம்பி இதயக்கனி என்பவர் ராணுவத்தில் அலுவலக உதவியாளராக ராஜஸ்தானில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே தனது சொந்த ஊரில் பழனி புதிதாக கட்டிய வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கிரகப்பிரவேசம் நடைபெற்றுள்ளது. அந்த வீட்டை கூட பழனியால் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று மனைவியும் குழந்தைகளம் கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.