ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே இப்படி ஓர் உறவா..? நெகிழவைக்கும் உண்மை சம்பவம்

குழந்தைப்பருவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பள்ளியும் அங்கிருந்த நம்முடைய ஆசிரியர்களும் தான்.


நாம் அனைவருக்குமே நம்முடைய சிறுவயதில் ஒரு ஆசிரியர் ஹீரோவாக தெரிந்து இருப்பார். நீ என்னவாக போகிறாய் என்று யாரேனும் நம்மிடம் கேட்டால் அந்த ஹீரோ ஆசிரியர் தான் நம் நினைவுக்கு வரும் முதல் ஆளாகவும் இருந்திருப்பார். அத்தகைய தாக்கத்தை உண்டாக்கி ஆசிரியர்களை போற்றும் வகையில் தான் இந்த ஆசிரியர் தின கொண்டாட்டம் திகழ்கிறது. இன்றைய சமுதாயத்தில் கல்வியானது வணிக மயமாகி விட்டது. சிறு பிள்ளைகளுக்கு நாம் லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து தான் படிப்பு கற்று தருகிறோம். இருப்பினும் இந்த சூழ்நிலையிலும் பணத்தை எதிர்பாராமல் குழந்தைகளுடைய எதிர்காலத்தை மட்டுமே கருதி பாடம் நடத்தும் தன்னலமில்லா ஆசிரியர்கள் இன்றும் நம் சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இன்றும் ஒரு ஆசிரியர் பள்ளியை விட்டு வெளியேறினால் அந்த ஆசிரியருக்காக அந்த பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களும் அழ கூடிய அளவிற்கு மாணவர்களின் அன்பை சம்பாதித்த ஆசிரியர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு சான்றாக உள்ளவர்தான் ஆசிரியர் பகவான் . அரசு பள்ளியில் பணியாற்றி வரும் பகவான் வேறு இடத்திற்கு பணியிடை மாற்றம் செய்ய இருந்த போது அதனை அறிந்த பள்ளிக்கூட மாணவர்கள் அந்த ஆசிரியரை கட்டியணைத்து இந்த பள்ளியை விட்டு நீங்கள் செல்லக்கூடாது என்று அழுத சம்பவம் நம் அனைவரையும் நெகிழ வைத்தது. இது வெறும் பாடப் புத்தகத்திற்கு பள்ளிக்கும் இடையேயான உறவு கிடையாது அதையும் தாண்டி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான ஒரு அழகான பந்தம் என்றுதான் கூறவேண்டும். ஆசிரியர் என்பவர் பாடம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் கஷ்ட நஷ்டங்களும் பங்கெடுத்து அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுபவர் ஆக இருக்க வேண்டும். 

இதனைப் பற்றி ஆசிரியர் பகவானிடம் கேட்டபோது அதற்கு பதிலளித்த ஆசிரியர் , "எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர்கள் என்னை வளர்த்தெடுத்தார்கள். வறுமை, குடும்ப பிரச்சனைகள் என பல சுமைகளை சுமந்துகொண்டு பள்ளிக்கு வந்தபோது , ஆசிரியர்களின் கனிவான வார்த்தைகளும்,கவனிப்பும்தான் எனக்கு ஆறுதலை தந்தது . என் மாணவர்களிடமும் நான் அதையே கடைபிடிக்கிறேன் என்று கூறுகிறார். 

பாடபுத்தகத்துடன் தன் பணி முடியவில்லை என்பதை தன் செயலால் உணர்த்திக் காட்டிக் காட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசிரியர் பெருமக்களுக்கும் உரிய நாள் தான் இந்த ஆசிரியர் தினம் என்று கூறினால் அது மிகையாகாது.