ஆசிரியர்கள்தான், இந்த சமுதாய முன்னேற்றத்தின் படிக்கட்டுக்கள்..! ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி வணங்குவோம் !

இந்த சமுதாயத்தில் ஒருவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பில் மட்டுமல்லாது ஆசிரியர் வளர்ப்பிலும் உள்ளது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.


ஆசிரியர் பணி என்பது ஒரு தன்னலமற்ற தவவாழ்வு என்றே கூறலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்னும் பழமொழிக்கு இணங்க குழந்தைகளின் சிறுவயது முதலே அவர்களது உள்ளத்தில் நல்ல குணங்களை விதைத்து அவர்களை சமுதாயத்தில் ஒரு வெற்றியாளராக உருவாக்கி காட்டுவது ஆசிரியர்களின் தலை சிறந்த பணியாகும். சட்டையின்மேல் பட்டன்களை எப்போதும் திறந்துவிட்டு திரிந்த பள்ளிப்பருவத்தில், ஒரு ஆசிரியர் செவிலில் விட்ட அறைதான் இன்றுவரை சட்டையின் அத்தனை பட்டன்களையும் ஒழுங்காக ஒருவனை போடவைக்கிறது.

ஒருவன் தன்னுடைய வாழ்வில் உயர உயர அவனுடைய உயர்வை பார்த்து உலகிலுள்ள மற்றவர்கள் அனைவரும் பொறாமை கொள்ளலாம் . ஆனால் அவனைக் கண்டு பொறாமை படாத ஒரே ஒரு உள்ளம் யார் என்று கேட்டால் அது ஆசிரியர்கள் மட்டும்தான். ஏனெனில் அவர்களை உறுதுணையாக கொண்டு தான் ஒவ்வொரு படிக்கட்டாக நம் வாழ்வில் ஏறிக் கொண்டிருக்கிறோம் .

ஆனால் முதல் படிகட்டில் நிற்கின்ற ஆசிரியர்களை விட்டுவிட்டு நாம் மேலே இருக்கிற கடைசி படிகட்டு இருக்கு வந்து விடுகிறோம். கீழே உள்ள படியில் நின்று கொண்டிருந்தாலும் மேல் படியில் உள்ள தன்னுடைய மாணவன் இன்னும் மேன்மை அடையவேண்டும் என்னும் நினைக்கும் ஒரே உள்ளம் ஆசிரியர்கள் மட்டும் தான். இத்தகைய தன்னலமில்லாத தெய்வங்களைப் போற்றும் வகையில் தான் ஆசிரியர் தினமானது அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதே போல் இந்த ஆண்டும் நம்முடைய ஆசிரியர் பெருமக்களை நினைத்து அவர்களுடைய தியாகங்களையும் தன்னலமற்ற செயல்களையும் போற்றி வணங்குவோமாக.