இரும்பு ஸ்கேல்..! தலையில் ஓங்கி ஒரு அடி! வெட்டுக் காயத்தால் அலறிய மாணவன்! புனித பிரான்சிஸ் பள்ளியில் பயங்கரம்!

பள்ளி ஆசிரியை இரும்பு ஸ்கேலால் 6 வயது சிறுவனின் தலையில் அடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை தரமணியில் புனித பிரான்சிஸ் என்ற தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. 2 வீடுகளை இணைத்து இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இதே பள்ளியில் லோகேஷ் என்ற 2 வயது மாணவன் படித்து வருகிறான். திங்கட்கிழமையன்று கமலா என்ற ஆசிரியை இரும்பு ஸ்கேலால் லோகேஷின் தலையில் அடித்துள்ளார். கூர்மையான பகுதி தலையில் பட்டதால், தலையிலிருந்து ரத்தம் பெரிய அளவில் கொட்டி தீர்த்துள்ளது.

பதறிப்போன பள்ளி நிர்வாகத்தினர் லோகேஷை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி கொடுத்துள்ளனர். மேலும், ரத்தக்கறை படிந்த சட்டையை கழட்டி சோப் போட்டு துவைத்து கொடுத்துள்ளனர்.

வீட்டிற்கு சென்றபோது லோகேஷின் தலையில் கட்டு போடப்பட்டிருந்ததால், அவனுடைய பெற்றோர் பதறிப்போயினர். உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் இரும்பு ஸ்கேலால் அடிக்கப்பட்டதை உறுதி செய்தனர். உடனடியாக பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அப்போது "இந்த வருடத்தில் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டாம் என்றும், சிகிச்சைக்காக 5,000 ரூபாய் தருவதாகவும்" பள்ளி நிர்வாகத்தினர் சமரசம் பேசியுள்ளனர்.

ஆனால் இதற்கு உடன்படாத லோகேஷின் பெற்றோர், பிற பிள்ளைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கேயும் பள்ளி நிர்வாகத்தினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்துள்ளனர். லோக்கேஷின் தாயார் கூறுகையில், "கல்விக்கட்டணம் செலுத்த படாததால் ஆசிரியர்கள் என் மகனை தாக்கியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவமானது தரமணியில் பரபரப்பை ஏற்படுத்தியது.