மரத்தை காப்பாபாற்ற முயன்ற ஆசிரியருக்கு பலாத்கார குற்றவாளி பட்டம்! அதிர வைத்த அரசுப் பள்ளி சம்பவம்!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பது பந்தலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கையுண்ணி என்னும் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக 49 வயது மதிக்கத்தக்க முருகேசன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். திடீரென்று நேற்று முன்தினம் அப்பகுதி காவல் நிலையத்தில், பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததற்காக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

புகாரை பெற்றுக்கொண்ட தேவாலா காவல்துறையினர், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் முருகேசனின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்‌.

இதற்கு கண்டனம் தெரிவித்து முருகேசனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரசு பள்ளியின் வாசலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சேரம்பாடி காவல்துறையினர் அரசுப்பள்ளி வளாகத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளனர்.

அதாவது, கையுண்ணி அரசு பள்ளி வளாகத்தில் மிகவும் பழமையான மாமரம் இருந்து வந்துள்ளது. அந்த மரத்தை வெட்டுவதற்காக சில ஆசிரியர்களும், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்களும் திட்டமிட்டனர். இதற்கு முருகேசன் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மரத்தை வெட்டுவது அதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அவர் அதில் கையெழுத்திடவில்லை. ஆனால் இரவோடு இரவாக மரம் கடத்தப்பட்டது. இதற்கு எதிராக முருகேசன் களம் இறங்கி விடுவார் என்பதற்காக பயந்துப்போன பள்ளி நிர்வாகம் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மரம் வெட்டியது தொடர்பாக சிலர் மீது எருமபாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சேரம்பாடி வனத்துறையினர் பள்ளிக்கு வந்து பார்வையிட்டு சென்றனர். 

இந்த சம்பவமானது பந்தலூர் தாலுகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.