வரும் வியாழக்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் ஓப்பன்..! அரசாணையை வெளியிட்டார் எடப்பாடியார்! ஆனால் 6 கண்டிசன்கள்..! என்னென்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் மதுபான கடைகள் வருகிற மே மாதம் 7ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நோய் பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு தற்போது மே 7ஆம் தேதி முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது. எனினும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபான கடைகள் மட்டும் சில நிபந்தனைகளுடன் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே உள்ள இடைவெளியை ஆறு அடி ஆக இருக்கவேண்டும் எனவும், மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மதுபான கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியில் அமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மதுபான கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற பகுதிகளுக்கு செல்வதால் மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் மதுபான பார்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை எனவும் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.