6 பிள்ளைகள் பெத்தும் இப்போ நாதி இல்லை..! கணவனை காப்பாற்ற கடலை மிட்டாய் விற்கும் தஞ்சை மூதாட்டி! கண்களை குளமாக்கும் நிகழ்வு!

தஞ்சாவூர்: 6 பிள்ளைகள் பெற்றும் பயனில்லை என்பதால் தனி ஆளாக தனது கணவரை மூதாட்டி ஒருவர் சிரமப்பட்டு பராமரித்து வரும் சோகமான கதை இது...


தஞ்சை சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் சுசீலா. 65 வயதான இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி (80 வயது). இவர்களுக்கு  4 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள். இதில், ஒரே ஒரு மகனை தவிர எஞ்சிய அனைவரும் திருமணமானவர்கள். அவர்கள்  தனித்தனியாக வசித்து வரும் நிலையில், தாய், தந்தையை பராமரிக்காமல் தனித்து விட்டுவிட்டனராம். கஷ்டப்பட்டு பிள்ளைகளை பெற்று வளர்த்து,  பராமரித்தும் அவர்கள் தங்களை கண்டுகொள்ளாமல் தனியாக விட்டுவிட்டதால் கிருஷ்ணமூர்த்தி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு சரியாகக் காது கேட்காத நிலை உள்ளது.

மேலும்,  காலில் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய நேரிட்டதால், சரியாக நடமாட முடியவில்லை. இதனால், மிட்டாய் வியாபாரம் செய்து வந்த  கிருஷ்ணமூர்த்தி வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இருந்தாலும் அவரது மனைவி சுசீலா, கணவனை கஷ்டப்பட விடாமல் கடலை மிட்டாய் விற்க தொடங்கியுள்ளார். தஞ்சை பெரிய கோயிலுக்கு நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்என்பதால் சுசீலாவும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து கடலை மிட்டாய் விற்று வருகின்றனர்.

அவரது கணவர் சிவகங்கை பூங்காவில் அமர்ந்தபடி மிட்டாய் விற்க, சுசீலா மட்டும்பெரிய கோயில் உள்ளே நடந்துசென்று கடலை மிட்டாய் விற்கிறார்.''தினசரி வெயில், மழை என்று பாராமல் இப்படி அலைந்தால்,சராசரியாக ரூ.200, 300 வருமானம் கிடைக்கும். அதில்தான் எங்களது பொழப்பு ஓடுகிறது. கோயிலுக்கு வருவோர் எனது ஒடிந்த தேகத்தைப் பார்த்துபரிதாபப்பட்டு, காசு தருவார்கள். ஆனால், கை நீட்டி யாரிடமும் சும்மா காசு வாங்கக்கூடாது என்பதால் நான் வாங்க மாட்டேன். மிட்டாய் வாங்கிட்டு, காசு கொடுங்க என்பேன்.

அவர்களும் கூடுதலாக சில பாக்கெட் கடலை மிட்டாய் வாங்கிக் கொண்டு காசு தருவார்கள். அந்த காலத்திலேயே எஸ்எஸ்எல்சி வரை படித்த நான், 6 பிள்ளைகள் இருக்கிறாங்களே, வளர்ந்ததும் நம்மை கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பியிருந்தேன். அதற்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்துவிட்டேன். இப்படி பெற்ற பிள்ளைகள் திடீரென கைவிடுவார்கள் என்று நினைத்தே பார்க்கவில்லை. கை, கால்கள் வலிக்க ஓய்வு எடுக்கும் வயதில் ஓடியாடி சம்பாதிக்க வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது.

இப்போதைக்கு கடலை மிட்டாய் விற்பனை நல்லபடியாகச் செல்கிறது.அது போதும். பிள்ளைகள் அருகில் இல்லை என்ற மன வேதனையுடன்எங்களின் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்ற பழமொழி எங்களுக்குச் சரியாக இருக்கு. என் கணவர் அடிக்கடி கவலைப்படுவார். நான் இருக்கும் வரை நீ ஒரு சொட்டு கண்ணீர் விடக்கூடாது என்று சொல்லி நான்சமாதானப்படுத்துவேன்,'' என்று கண்ணீர் மல்க பேசுகிறார்.