தமிழகத்தில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தாக்குதல்..! அதிகரிக்கும் எண்ணிக்கை! யார், யாருக்கு தெரியுமா?

நியுசிலாந்தில் இருந்து வந்த ஒருவர் மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அந்த நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.


ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரம் என்ஜினியருக்கு தமிழகத்தில் முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 14 நாட்கள் சிகிச்சையில் அவர் குணமாகி வீடு திரும்பினார். மறுநாள் டெல்லியில் இருந்து தமிழகம் வந்த வடமாநில இளைஞர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில் அயர்லாந்தில் இருந்து வந்த சென்னை இளைஞருக்கு கொரோனா நேற்று முன் தினம் உறுதி செய்யப்பட்டால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3ஆக இருந்தது. இதற்கிடையே தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் நியுசிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவரும் கொரோனாவுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் அனைவருக்குமே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை தொடர்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.