வேகமாக பரவும் கொரோனா..! வெளிநாட்டினர் கலந்து கொண்ட சிவராத்திரி! சுகாதாரத்துறை கண்காணிப்பில் ஈஷா மையம்!

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் வெளிநாட்டினர் கலந்து கொண்ட சிவராத்திரி நடத்திய ஈஷா யோகா மையமும் கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியுள்ளதாக ஒரு தரப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் மற்றொரு தரப்பு கொரோனா ஆரம்பகட்டத்தில் இருந்த போது பிப்ரவரி மாதம் இறுதியில் கோவை வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் சிவராத்திரி நடைபெற்றதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த சிவராத்திரி விழாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோல் கலந்து கொண்டனர். இதனால் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஒரு தரப்பு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடம், டெல்லியில் தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை மட்டும் சேகரிக்கிறீர்கள், பிப்ரவரி மாதம் இதேபோன்று ஈஷா யோகா மையம் நவராத்திரி விழா நடத்தியது அதில் வெளிநாடுகளிலிருந்து பலர் கலந்துகொண்டு சென்றுள்ளனரே'' என்று பீலா ராஜேஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் அளித்த பதிலில்  ''நாங்கள் பிப்ரவரி 15-க்குப் பிறகு நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்காணிக்கிறோம். ஈஷா நிகழ்ச்சி குறித்தும், அதேபோன்று வேறு நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும் தகவல்கள் திரட்டப்படுகின்றன. பொதுமக்கள் கும்பலாகக் கூடிய அனைத்து நிகழ்வுகளும் கண்காணிக்கப்பட்டு தகவலைச் சேகரித்து வருகிறோம்'' என்று பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

இதன் மூலம் ஈஷா யோகா மையமும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் வந்துள்ளது. அதே சமயம் கடந்த சனிக்கிழமையே கோவை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈஷா யோகா மையம் சென்று அங்கு தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தியுள்ளனர். அப்போது யாருக்கும் கொரோனா அறிகுறி கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.