நேரடியாக களத்தில் இறங்கி சமூக இடைவெளியை அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த தமிழக முதல்வர்..!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்படுகிறதா எனவும் அம்மா உணவகத்தில் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.


உலகையே அச்சுறுத்தி வரும் ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. சைனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று தற்போது உலகெங்கிலும் உள்ள 199 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,500-ஐ தாண்டி உள்ளது. 

இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இதனையடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 

இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் காய்கறிகள், குடிநீர்,மருந்து, பால், உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல், இறைச்சி, மீன், ஏடிஎம் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்கள் கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்களில் உணவு பொருட்களை பார்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேசமயம் தமிழகத்தில் பல இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் தேவைப்படுபவர்கள் பார்சலில் உணவுகளை பெற்றுக்கொண்டு செல்லலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் சுத்தமான முறையிலும் சுகாதாரமான முறையிலும் உணவு பரிமாறப்படுகிறது எனவும் அங்கு சமூக இடைவெளி சீராக கடைபிடிக்கப்படுகிறதா? எனவும் அவர் நேரில் சென்று இன்றையதினம் ஆய்வு செய்திருக்கிறார். தன்னுடைய ஆய்வை முடித்த பின்பு பேசிய முதலமைச்சர், 200க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. 

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை அங்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியிருக்கிறார். ஹோட்டல்களில் அதிகமான விலைக்கு உணவுகளை விற்றால் அதனைப் பற்றி பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும் சுவையாகவும் இருந்ததாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.