இறந்தவர்களை வைத்து அரசியல் செய்பவர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்..! தமிழக முதல்வர் அதிரடி பேச்சு.!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

இந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை பற்றி விளக்கினார். அப்போது பேசிய அவர் மேட்டுப்பாளையத்தில் சுமார் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

இந்த மழையின் காரணமாக அந்த சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ளது என்று அவர் கூறியிருந்தார். இந்த விபத்தில் 17 பேர் உயிர் இழந்ததை குறித்து தான் மிகவும் வருத்தம் அடைவதாகவும் அவர் கூறினார்.

மேலும் தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய். 4 லட்சம் இழப்பீடு தொகை வழங்க உள்ளதாக கூறி இருந்தோம். தற்போது அதோடு சேர்த்து ரூபாய் .6 லட்சத்தையும் அந்தக் குடும்பத்தினருக்கு வழங்க உள்ளோம் .

மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்களில் தகுதிக்கு ஏற்றவாறு யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உள்ளோம் என்றும் அவர் கூறினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் மீண்டும் புதிய வீடுகளை கட்டித் தர உள்ளோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த சுற்று சுவரை கட்டியவர் காண்ட்ராக்டர் சிவசுப்ரமணியன் . அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டப்படி அவர் மீது எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார் என்றும் கூறினார். தமிழக அரசு இறந்தவர்களின் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய அனைத்து விதமான கடமைகளிலும் சரியாக செய்து வருகிறது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறிப்பிடத்தக்கது.