தெலுங்கானா ஆளுநரானார் தமிழிசை சவுந்திரராஜன்! காங்கிரஸ்காரர் மகள் டூ மாநிலத்தின் முதல் பெண்மணி!

தெலுங்கானா மாநில ஆளுநராகியுள்ளதன் மூலமாக தமிழிசை சவுந்திரராஜன் அம்மாநிலத்தின் முதல் பெண்மணியாகியுள்ளார்.


ஆளுநராக பதவி ஏற்க தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் சென்றடைந்த தமிழிசை சவுந்திரராஜனுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகை சென்ற தமிழிசைக்கு அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

தெலுங்கானா ஆளுநராகியுள்ளதன் மூலம் அம்மாநிலத்தின் முதல் பெண்மணி தமிழிசை தான். இனி அம்மாநிலத்தில் எவ்வித சட்டம் இயற்றப்பட்டாலும் அதற்கு தமிழிசையின் ஒப்புதல் பெற வேண்டும். தெலுங்கானாவில் இனி முதலமைச்சர்கள், அமைச்சர்கள், தலைமை நீதிபதி போன்றோருக்கு தமிழிசை தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

தெலுங்கானா மாநில ஆளுநராகியுள்ள தமிழிசை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார். பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த தமிழிசை பாஜகவில் இணைந்த போது விமர்சனங்கள எழுந்தன. தந்தை குமரி அனந்தன் மகள் தமிழிசையின் செயல் பிடிக்காமல் ஒதுங்கினார்.

ஆனால் மாவட்ட பொறுப்புகள் தொடங்கி மாநில தலைவர் பொறுப்புகள் வரை படிப்படியாக உயர்ந்த தமிழிசை எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் அவர் கடுமையான உழைப்பால் தற்போது தெலுங்கானா ஆளுநர் ஆகியுள்ளார்.