பா.ஜ.கவுடன் யாரெல்லாம் கூட்டணி? தமிழிசை வெளியிட்ட புது தகவல்!

தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும், திமுக, காங் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் இருந்து சென்னை வந்தார். அவரை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் சென்னை விமானத்தில் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

காஷ்மீரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பாஜக ஏற்பாடு செய்திருந்த கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்துள்ளோம். மேலும் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணி என்ற வீரருக்கு பா.ஜ.க சார்பில் அஞ்சலியை செலுத்துகிறோம்.  இந்திய நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டை பாதுகாக்க முடியும். தொடந்து பேசிய அவர், பா.ஜ.க ஆட்சியில் 5 லட்சம் கோடிக்கு தமிழகத்திற்கு மட்டும் முதலீடு செய்துள்ளது என்றார். மேலும் காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட எவற்றையும் பாதுகாக்கவில்லை. எங்களால் செய்த சாதனைகளை பட்டியலிட முடியும். ஸ்டாலினால் பட்டியலிட முடியுமா? 

மேலும், நேற்றைய தங்மணியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் நல்ல கருத்துக்கள் குறித்து பேசப்பட்டது என்றும், விரைவில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ செய்தி வரும் என கூறினார். திமுக, காங் கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் என்றும், தி.மு.க கூட்டணியில் இல்லாத கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரலாம்.

இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.