தமிழகத்தில் இருந்து சென்று வருகிறேன்! விமான நிலையத்தில் நெகிழ வைத்த தமிழிசை!

தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் இதற்காக அவர் சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.


தெலுங்கானா மாநில ஆளுநராக கடந்த ஞாயிறன்று தமிழிசை சவுந்ததராஜன் நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை அவரிடம் டெல்லியில் இருந்து வந்த அதிகாரி கடந்த வாரம் கொடுத்துச் சென்றார். அந்த ஆணையை தான் சென்று வரும் அனைத்து கோவில்களிலும் சென்று வைத்து ஆசிர்வாதம் பெற்றார் தமிழிசை.

இந்த நிலையில் இன்று மாலை ஆளுநராக தமிழிசை பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, தமிழ்நாட்டில் இருந்து சென்று வருகிறேன், என்மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். தெலுங்கானாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முயற்சிகள் எடுப்பேன்,

தமிழ்நாட்டில் இருந்து உங்களுடைய சகோதரியாக, தமிழ் மகளாக சென்று வருகிறேன். எனது கடமை அங்கிருந்தாலும் எனது எண்ணம் இங்கு தான் இருக்கும். தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆரோக்கியமான அரசியல் சுழ்நிலையினை முன்னெடுக்க வேண்டும்" இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.