ரஜினியை விட்டு விலகுகிறார் தமிழருவிமணியன்

ரஜினிகாந்த் தீவிரமான பி.ஜே.பி. ஆதரவாளர் என்பது வெளியே தெரிந்துவிட்டது. இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று தமிழருவிமணியன் சொன்னதை ரஜினி ஏற்கவில்லை. மரியாதை இல்லாத இடத்தில் இருப்பாரா என்பது சந்தேகம்தான்..!


ரஜினிகாந்த் அடுத்த முதல்வர் என்று தமிழருவிமணியன் சொன்னபோது தமிழகத்தில் உள்ள அத்தனை கட்சியினரும் ஆனந்தப்பட்டனர். ரஜினி ரசிகர்கள் மட்டும்தான் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். ஏனென்றால் இவர் ஏற்கெனவே ஏகப்பட்ட முதல்வர்களை அடையாளம் காட்டிவிட்டார். அத்தனை பேரும் அடையாளம் தெரியாமலே போய்விட்டார்கள்.  வைகோவை விட மிகப்பெரும் அறிஞர், அறிவாளி, அரசியல்வாதி தமிழகத்தில் யாரும் இல்லை என்று சர்டிபிகேட் கொடுத்தார். அது போதாதா.. வைகோ காணாமல் போய்விட்டார்.

அதன்பிறகு விஜய்காந்த் தமிழகத்திற்கு மிகச்சிறந்த முதல்வராக இருப்பார் என்று ஓங்கிக் குரல் கொடுத்தார். அம்புட்டுத்தான். அந்த மூன்றாவது அணியும் விஜயகாந்தும் இன்னமும் எழுந்தரிக்கவே முடியவில்லை. அதனால் அடுத்தபடியாக ரஜினிகாந்த் பக்கம் வந்து சேர்ந்தார்.

ரஜினிகாந்த் இயல்பானவர். உண்மை பேசுபவர். நீதி, நியாயத்தின் பக்கம் நிற்பவர். அதனால் தமிழகத்திற்கு விமோசனம் ரஜினியால் மட்டுமே கிடைக்கும் என்று உறுதியாகச் சொன்னார்.  கட்சி ஆரம்பித்தால் நான் அவைத்தலைவர் என்று அடம்பிடித்து வந்தார் தமிழருவிமணியன். அது மட்டுமின்றி கட்சியை எப்படி நடத்தவேண்டும் என்று ரஜினிக்கு பல்வேறு வகுப்புகளும் நடத்தினார்.

இப்படியெல்லாம் கட்சி தொடங்கி நடத்தத்தான் வேண்டுமா என்ற பயத்தில்தான் ரஜினி இன்னமும் மன்றமாகவே வைத்து காலத்தை ஓட்டி வருகிறார். ரஜினி இப்போதைக்கு தேர்தலுக்கு வரமாட்டார் என்பது உறுதியானதால், தமிழருவியும் கொஞ்சநாள் அமைதி காத்தார். இந்த நேரத்தில்தான் ரஜினி ஏழு பேர் விடுதலை குறித்தும், பா.ஜ.க. குறித்தும் எகத்தாளமாக ஒரு பேட்டி கொடுத்தார்.

பா.ஜ.க.வை ஆபத்தான கட்சி என்று ரஜினி சொன்னதைக் கேட்டு குளிர்ந்து போயிருந்தார் தமிழருவி. ஆனால், அடுத்த நாளே அந்தர்பல்டி அடித்து, இந்த உலகத்திலேயே மோடிதான் பலசாலி என்று நச்சென்று சொல்லிவிட்டுப் போனார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாராம் தமிழருவி. உடனே ரஜினியை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

’’நீங்க இப்படி பேசுனது சரியில்லே... நமக்கு டெல்லி விவகாரமே வேண்டாம்..” என்ற ரீதியில் அட்வைஸ் கொடுத்தாராம். அதைக் கேட்ட ரஜினி, இப்போ என்ன செய்றது, திரும்பவும் மறுப்பு கொடுக்கணுமா என்று கேட்க, தமிழருவி  வெலவெலத்துப் போனாராம். நான் என் இஷ்டப்படிதான் இருப்பேன், எனக்குத் தோண்றதைத்தான் பேசுவேன் என்று முகத்திலடித்தால் போல் சொல்லிவிட்டாராம் ரஜினி.

இந்த அவமானத்திற்குப் பிறகும் ரஜினியுடன் இருக்கவேண்டுமா என்று தமிழருவி யோசித்து வருகிறாராம். அநேகமாக அடுத்து கமல்ஹாசனை முதல்வராக்க கிளம்பலாம் தமிழருவி என்பது ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் நல்ல செய்திதான்.