சர்வாரி ஆண்டு, தமிழ் வருடப்பிறப்பு என்ன செய்ய வேண்டும்?

தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி 2020, பங்குனி 31ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது.


திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். இது 60 ஆண்டுகளில் 34வது வருடம்

தமிழ் வருடப் பிறப்பன்று தமிழ்நாட்டில் முக்கிய மாவட்டங்களில் விஷுக்கனி காணல்' என்ற சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றனர். அதாவது, சித்திரை மாதம் பிறப்பதற்கு முந்தைய தினத்திற்கு முதல்நாள் இரவிலேயே, இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விடுவார்கள்.

வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், ஆபரணங்கள், பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களை தயாரித்து, ஒரு மனையின் மீது கோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைப்பர். அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைப்பர்.

சித்திரை மாதப் பிறப்பன்று அதிகாலை முதன் முதலாக வீட்டிலேயே வயது முதிர்ந்த பெண் எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி கொள்வார். பின்பு அவர், இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், புத்தாண்டு நிகழ்ச்சிக்காக பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் இனிவரும் நாட்கள் முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியும் மங்கலப் பொருள்கள் செழித்தும் இருக்கும் என்பது நம்பிக்கை.

இதேபோல் புது வருடப் பிறப்பன்று அன்று, சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்றுப் நாணயம் பெறுவார்கள் இதுவே கைநீட்டம் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு காசு மற்றும் காய், கனிகள் வழங்கப்படுகிறது. செல்வந்தராக இருந்தாலும் பொறுமையாக வரிசையில் நின்று பிரசாதமாகக் கைநீட்டம் பெறுகிறார்கள். கோவிலில் கைநீட்டம் பெற்றால் ஆண்டு முழுவதும் பணம் குவியும்; செல்வச் செழிப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.

எல்லோருக்கும் பண தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்று, லக்ஷ்மி தேவியை மனதார வேண்டிக்கொண்டு தமிழ்வருடப்பிறப்பு அன்று காலையில் உங்கள் வீட்டு வாசலில் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி இரண்டு ஏலக்காயை அதில் போட்டு மகாலட்சுமியை மனதார வேண்டி தீபம் ஏற்றுங்கள். இந்த தீபத்தை அதிகாலை வேளை 6 மணிக்கு முன்பாக ஏற்றி வைத்துவிடுங்கள். சூரியன் உதயமாவதற்கு முன்பு. இந்த தீபம் ஏற்றுவதன் மூலம் நமக்கு இருக்கும் பண கஷ்டமானது விரைவாக தீர்வதற்க்கு ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைக்கு நமக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்துமே, வரப்போகும் தமிழ்ப்புத்தாண்டில் கட்டாயமாக நம்மை விட்டு விலகும் என்ற நம்பிக்கையோடு, இந்த வருடத்தை வரவேற்போம்.