பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை.! எடப்பாடி பழனிசாமியின் சாதனைகள்!

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்யவும் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, தொழில் முனைவோர்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது.


1,298.20 கோடி ரூபாய் முதலீட்டில் 7,879 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை துவக்கி வைத்து, 10,062 கோடி ரூபாய் முதலீட்டில் 8,666 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 புதிய தொழிற்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்ட 9 திட்டங்களில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசுமுறைப் பயணமாக துபாய் சென்றபோது மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தப்படும் 1,000 கோடி ரூபாய் முதலீட்டிலான ஒரு திட்டமும், உலக முதலீட்டாளர்கள் 2019-ல் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி 2 திட்டங்களும் அடங்கும். மேலும் இதே மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 6 திட்டங்களின் வணிக உற்பத்தியும் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் என்ற வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இன்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களையும் சேர்த்து, 85 திட்டங்கள் தமது வணிக உற்பத்தியை ஏற்கனவே துவங்கிவிட்டன. மேலும் 187 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.  

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் 1992-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் அந்நிறுவனத்தின் பங்களிப்பை விவரிக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று ஒரு குறும்படம் வெளியிடப்பட்டது.