ஆறாவது ஆண்டாக தமிழகம் முதல் இடம்…! எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி

உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்வுசெய்யப்பட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தொடர்ந்து 6-வது ஆண்டாக இவ்விருதினை பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையிலும் தலைசிறந்து முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் பின்பற்றக் கூடிய வகையிலும் செயல்படுகிறது என்று மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்திருப்பது, மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது.

2015ஆம் ஆண்டு மின்சார விபத்தினால் இரு கைகளையும் இழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த திரு. நாராயணசாமி என்பவருக்கு 07.02.2018 அன்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைகள் மாற்று வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே அரசு மருத்துவமனையில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும், ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. இச்சிகிச்சைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.  

சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 3005க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், புதுக்கோட்டையில் நடைபெற்ற உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தானில் (Marathon) 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.

இச்சாதனைகள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும், ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற செயல்பாடுகளால் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக தொடர்ந்து திகழ்கிறது. இதன்மூலம் உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாகவே தமிழ்நாடு மாற்றி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.