கல்வியிலும் தொழில்துறையிலும் தமிழகம் புரட்சி செய்திருக்கிறது. முதல்வர் எடப்பாடியார் பெருமிதம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமியின் இல்ல விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார்.


அப்போது அவர், ராஜலட்சுமி அவர்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மனதில் இடம் பெற்று, மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் அமைச்சராக இடம் பெற்றார். இவர் சிறந்த முறையில் தன்னுடைய பொறுப்பை கவனிக்கக்கூடிய திறமை மிக்கவர், நல்ல கல்வி கற்றவர். கணவர் முருகன் அவர்கள் கட்சியில் பொறுப்பு வகித்து, கழகத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். நம்முடைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் குடும்பம் ஆரம்பகாலத்திலிருந்து கழகத்தில் இருக்கின்றனர். அவரது மாமனார் 1972 முதல் கழகத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார். 

2016-ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியோடு அம்மாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து, இன்றுவரை திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

ஏழை, எளிய, நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வித்தரம், கிராமப்புற பொருளாதாரம் அனைத்தும் உயர்வதற்கு அம்மாவின் அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக ஏராளாமன திட்டங்களை நம் அரசு செய்து கொண்டிருக்கிறது. கிராமப் புறங்களிலுள்ள மாணவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கின்றார்கள். ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்வி பயிலும் கனவு நீட் தேர்வு கானல் நீராகியது. அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க வேண்டுமென்ற அடிப்படையில், 7.5 உள் ஒதுக்கீடு மூலமாக தமிழ்நாடு முழுவதும் 313 மாணவச் செல்வங்களுக்கு மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்துள்ளது. 

விவசாயம் பிரதானமாக இருக்கும் இந்தப் பகுதிகளில் நீண்டகாலமாக தூர்வாரப்படாத ஏரிகளை தூர்வாருவதற்காக, குடிமராமத்துத் திட்டம் கொண்டுவந்து, ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டதால், அவை ஆழப்படுத்தப்பட்டு, பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைக்கின்றது.

நீர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கித் தந்திருக்கின்றோம். கல்வியில், நீர்மேலாண்மையில், தொழில் துறையில் புரட்சி என அனைத்திலும் புரட்சி படைக்கின்ற அரசு அம்மாவின் அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பெருமையுடன் தெரிவித்தார்.