மீண்டும் விறுவிறு பிரசாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..! சசிகலாவை கண்டுகொள்ளாமல் பிரசாரம்.

வரும் மே மாதம் தமிழகத்திற்கு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி கடந்த டிசம்பர் மாதமே எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.


ஏற்கனவே முதல் கட்ட பிரசாரத்தை முடித்த அவர் தற்போது இரண்டாவது கட்டமாக மீண்டும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடர் காரணமாக அவரது பிரசாரத்தில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டது. வரும் 5ம் தேதியுடன் சட்டமன்றம் நிறைவுக்கு வருகிறது.

ஆகவே வருகிற 7-ம் தேதி முதல் மூன்றாம் கட்ட பிரசாரத்தை தொடங்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதலில் திருவள்ளூர் மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். போரூரில் பிரசாரத்தை தொடங்கும் அவர் திறந்த வேனில் நின்றபடி பேசுகிறார். அதன் பிறகு அம்பத்தூர் சென்று மகளிர் சுய உதவி குழுவினரை சந்தித்து அவர்களின் மத்தியில் உரையாற்றுகிறார்.

இந்த கூட்டம் முடிந்ததும் ஆவடியில் தகவல் தொழில்நுட்ப குழுவினரை சந்திக்கிறார். இதன் பிறகு திருவள்ளூர் சென்று விவசாயிகள், நெசவாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து மாதவரம் சென்று பேசுகிறார். இறுதியாக மீஞ்சூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 6 இடங்களில் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்துவரும் நேரத்தில், சசிகலா 7ம் தேதி சென்னைக்கு வருவார் என்று சொல்லப்படும் நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் சுற்றுப்பயணம் செய்து கெத்து காட்டுகிறார் என்பதால் அவருக்கு அ.தி.மு.க.வில் ஆதரவு பெருகிவருகிறது.