மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் அரசு செய்தது போன்று வேறு எந்த அரசும் சலுகைகளை அள்ளி வழங்கியது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விரைவில் தேர்தல் அறிவிப்பு வர இருக்கும் நேரத்தில், மேலும் ஒரு இனிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முதல்வர்.
மாணவர்களுக்கு மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் பாஸ் கொடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி..
இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன் கீழ் மாணவர்களுக்கு சந்தோஷமான அறிவிப்பு வெளியிட்டார். கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி
19ம் தேதி முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.
மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020 _ -21ஆம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வுகள் மற்றும் பொதுத் தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனிமேல் பள்ளிக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதால் இந்த அறிவிப்பு மாணவர்களையும் பெற்றோரையும் குஷிப்படுத்தியுள்ளது.