இன்னும் பத்தே நாளில் ஆட்சி அவுட்! தினகரன் கூறும் பரபரப்பு புதுக் காரணம்!

இடைத்தேர்தலில் எப்படியும் 8 தொகுதிகளை வென்று பெரும்பான்மையைத் தக்கவைப்போம் என்கிறார் எடப்பாடி. ஆனாலும், இந்த ஆட்சி கலையப்போகிறது என்ற குஷியில் தினகரனும் ஸ்டாலினும் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்.


எப்படியென்றால், அவர்கள் போடும் கணக்கு இப்படித்தான். டெல்லியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார் என்று எடப்பாடி உறுதியாக நம்புகிறார். அப்படியே மோடி வந்தாலும், அவர் எடப்பாடியை ஆதரிக்க மாட்டார் என்று தினகரன் நினைக்கிறார். ஏனென்றால், அவருக்கு நிச்சயம் மெஜாரிட்டி கிடைக்காது. அந்த சூழலில் ஸ்டாலின் ஆதரவைக் கேட்க வேண்டி இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் ஸ்டாலின் நிபந்தனையின் பேரில் ஆதரவு கொடுப்பார்.

அந்த நிபந்தனைக்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆட்சியில் உட்கார வைக்க முயன்றால், கட்சியில் மோதல் உண்டாகும், கட்சி உடையும், எளிதாக தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் என்பதுஒரு கருத்து. டெல்லியில் மோடியால் ஆட்சியைப் பிடிக்கமுடியாத பட்சத்தில், காங்கிரஸ் கட்சி அல்லது காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலக் கட்சிதான் ஆட்சிக் கட்டிலில் அமரும். அப்போது தமிழக அரசியலுக்கு முட்டுக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

சி.பி.ஐ. மூலம் விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்ட சிலருக்கு நெருக்கடி கொடுத்தாலே ஆட்சி கலைந்து, தி.மு.க. வந்துவிடும் என்கிறார் தினகரன். அதனால் இப்போது ஸ்டாலின் டீமைவிட தினகரன் ஆட்கள்தான் செம குஷியில் இருக்கிறார்கள்.   செல்லும் இடமெல்லாம் எடப்பாடியை வெளுத்து வாங்குகிறார் தினகரன்.  இந்த நிலையில் கோவை சூலூர் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து டி.டி.வி தினகரன் ஜாலியாக பேச்சைத் தொடங்கினார்,

``புரட்சி என்கிற வார்த்தையை யாருக்குப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் மதுரையில் எடப்பாடிக்கு புரட்சிப் பெருந்தகை என்று பெயர் சூட்டிருக்காங்க. இதை மட்டும் கேட்டிருந்தால் புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் எனக்கு புரட்சி என்கிற பட்டமே வேண்டாம் என்று ஓடியிருப்பார்கள். எடப்பாடிக்கு புரட்சிப் பெருந்தகை என்பதற்குப் பதிலாக புரட்சிப் பெருந்தொகை என்று வைத்திருக்கலாம். மோடிக்கு மண்டியிடுகின்றவர்களுக்கு இப்படி பெயர் சூட்டினால் எப்படி? என்று கொந்தளித்தவர் பன்னீரையும் விட்டுவைக்கவில்லை.

எட்டப்பன் என்றால் இனி யாரையும் தேடி அலையவேண்டியதில்லை, நமது பன்னீரும், எடப்பாடியும் இருக்கிறார்கள். துரோகம் செய்பவர்கள் என்று இவரை எட்டப்பன் பன்னீர் என்றே அழைக்கலாம் என்று பேசி கைதட்டல்களை வாங்கினார்.. மேலும், இன்னும் பத்தே நாட்களில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என்று கூறிவருகிறார் தினகரன்.

கணக்கெல்லாம் நல்லாத்தான் இருக்கிறது.