கழட்டிப்போட்ட கோமணத் துணி செந்தில் பாலாஜி! டி.டி.வி சுளீர் பேட்டி!

நாங்கள் கழட்டிப்போட்ட கோமணத் துணியான செந்தில் பாலாஜியை தி.மு.க எடுத்து வைத்துள்ளதாக தினகரன் காட்டமாக கூறியுள்ளார்.


  சென்னையில் தி.மு.க தலைவர் முன்னிலையில் செந்தில் பாலாஜி அந்த கட்சியில் இணைந்தார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் தி.மு.கவில் இணைந்ததாக கூறினார். இதனை தொடர்ந்து இதுநாள் வரை செந்தில் பாலாஜியை கட்சியில் வைத்திருந்த அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது தினகரன் பேசியதாவது:- செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க. அவர் கட்சியை விட்டு விலக உள்ளதாக 3 மாத காலமாகவே என்னிடம் கூறப்பட்டு வந்தது. ஆனால் செந்தில் பாலாஜி தொடர்ந்து எங்களுடன் இருப்பார் என்று நம்பினோம். ஆனால் நம்பிக்கையை பொய்யாக்கிவிட்டு இப்போது தி.மு.கவிற்கு சென்றுவிட்டார்.

  என்னை விட்டு செல்ல முடிவெடுத்த செந்தில் பாலாஜி அ.தி.மு.கவில் கூட சென்று இணைந்திருக்கலாம். ஆனால் செந்தில் பாலாஜி தி.மு.கவில் இணைந்ததை தான் என்னால் ஜீரனிக்க முடியவில்லை. ஏனென்றால் தி.மு.க எதிர்ப்பு எங்கள் ரத்தத்தில் உண்டு. இனி செந்தில் பாலாஜி எப்படி ஜெயலலிதா படத்தை வைத்துக் கொள்ள முடியும்?

  செந்தில் பாலாஜி எங்களை பிடிக்காமல் போய்விட்டார். இப்போது எனக்கு ஒரு சம்பவம் நியாபகத்திற்கு வருகிறது- கடந்த 1999ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக நான் களம் இறக்கப்பட்டேன். அப்போது அ.தி.மு.கவில் இருந்து சென்ற செல்வேந்திரன் தி.மு.க வேட்பாளராக என்னை எதிர்த்து போட்டியிட்டார். பிரச்சாரத்தின் போது செல்வேந்திரன் ஒரு கருத்தை முன்வைத்தார்.

  என்னை பட்டுத்துணி என்று கூறிய செல்வேந்திரன் அவரை பருத்தி துணி என்று குறிப்பிட்டார். மேலும் பட்டுத்துணி அணிந்தால் மக்களுக்கு உருத்தும, பருத்தி துணி நன்றாக இருக்கும் என்று கூறி தனக்கு ஓட்டுப்போடுமாறு செல்வேந்திரன் எனக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்திற்கு அ.தி.மு.க மூத்த தலைவர் காளிமுத்து சரியான பதிலடி கொடுத்தார்.

  தினகரன் பட்டுத்துணியாக இருக்கலாம், ஆனால் செல்வேந்திரன் அ.தி.மு.க கழட்டி போட்ட கோமணத் துணி, அந்த கோமணத்துணியை எடுத்து தி.மு.க வேட்பாளராக்கியதாக காளிமுத்து பிரச்சாரம் செய்தார். தற்போது எனக்கு அந்த நியாபகம் தான் வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க என்னை பழிவாங்க காத்துக கொண்டிருந்தது.

  தற்போது செந்தில் பாலாஜியை தி.மு.கவில் சேர்த்ததன் மூலம் என்னை பழிவாங்கிவிட்டதாக கருதலாம். ஆனால் தற்போது எனக்கு காளிமுத்து கூறிய கேமாணத்துணி தான் நியாபகத்திற்கு வருகிறது. நாங்கள் கழட்டிப்போட்ட கோமணத்துணியை எடுத்து வைத்துக் கொள்ளும் நிலையில் தி.மு.க உள்ளது.

 இவ்வாறு தினகரன் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி எந்த இடத்திலும் தினகரனை விமர்சிக்கவில்லை. ஆனால் தினகரனோ செந்தில் பாலாஜியை கோமணத்துணி என விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது