ஒரு வழிப்பாதைனு தெரியல...! பொள்ளாச்சி ஜெயராமன் சகோதரர் குடும்பம் சென்ற காரை சுக்கு நூறாக்கிய லாரி! தூத்துக்குடி சோகம்!

தமிழக துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் திருச்செந்தூரில் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவமானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் வசித்து வந்தார். இவர் தமிழகத்தின் துணை சபாநாயகராக பொள்ளாச்சி ஜெயராமனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் விடுமுறைக்காக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக 2 கார்களில் புறப்பட்டுள்ளனர். 

மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மேம்பாலத்தில் சென்றபோது, எதிர்பாராவிதமாக எதிரே வந்த கண்டெய்னர் லாரி கார் மீது வேகமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே சுபாஷ் சந்திரபோஸின் பேரன் நீரேந்திரன், பேத்தி ரம்யா, ரம்யாவின் தோழியான பார்கவி மற்றும் ஓட்டுநர் ஜோகன் ஆகியோர் உயிரிழந்தனர்.

சுபாஷ் சந்திரபோஸ், அவருடைய மனைவி மற்றும் மகள் மற்றொரு காரில் வந்ததால் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்டோன்மென்ட் காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலை தற்போது ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் ஓட்டுநர் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். மேலும் நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட இடத்திற்கு பிறகு பெரிய அளவு பலகைகளில் ஒருவழிப்பாதை என்று எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நெடுநாளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.