ஜோதிமணியிடம் கரு நாகராஜன் ஆபாசமாக நடந்து கொள்ள காரணம் நியுஸ்7 நெல்சன் சேவியர்..! திமுக பகீர் குற்றச்சாட்டு!

நியுஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தின் போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை பாஜக செய்தி தொடர்பாளர் கரு நாகராஜன் ஆபாசமாக பேசியதை தடுக்காமல் அவர் பேச அதிக நேரம் கொடுத்த காரணத்தினால் இனி நியுஸ் 7 விவாதங்களில் திமுக தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கமாட்டார்கள் என்று திமுக தெரிவித்துள்ளது.


"பத்திரிகைச் செய்தி - தி.மு.க. செய்தித் தொடர்புச் செயலாளரும் - நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் விவாதத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பங்கேற்ற கரூர் மக்களவை உறுப்பினர் செல்வி. எஸ்.ஜோதிமணி அவர்களை ஒரு பெண் என்றும் பாராமல், தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக பா.ஜ.க.,வைச் சேர்ந்த கரு.நாகராஜன் பேசியதற்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்” என்பதற்கு ஏற்ப, ஆக்கபூர்வமான கருத்துக்களையோ, மத்திய அரசின் சாதனைகளையோ எடுத்து வைப்பதற்கு எவ்வித வழியும் இல்லாமல் - விரக்தியின் விளிம்பில் கையறுந்த நிலையில் தவித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க.,வினர் இதுபோன்ற தரங்கெட்ட விவாதங்களில் ஈடுபடுவது சமீப காலமாக அதிகரித்து வருவது மட்டுமின்றி; “தொடர் கதையாகி” வருகிறது! 

செல்வி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சிக்கும் போது - அந்தத் தொலைக்காட்சியின் நெறியாளரும் வேடிக்கைப் பார்த்து- கரு.நாகராஜனுக்கு அதிக நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து “உங்கள் மனம் போன போக்கில் திட்டிக் கொள்ளுங்கள்” என்று அனுமதி அளித்து மிகுந்த கண்டனத்திற்குரியது.

“பத்திரிகை தர்மம்” எங்கோ பதுங்கிக் கொண்டு - எதற்காகவோ பா.ஜ.க.,விற்கு கைகட்டி நின்றதைத்தான் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி விவாதத்தில் பார்க்க முடிந்தது. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் மீது “தனிப்பட்ட தாக்குதலை” நடத்துவதும், அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று இழிவான வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதும் பா.ஜ.க.,வினருக்கு வாடிக்கையாகி விட்டது.

எதிர்க்கட்சியினரை என்ன பேசினாலும் தங்கள் மீது வழக்கு வராது - ஏன், உயர்நீதிமன்றத்தை விமர்சித்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆணவம் பா.ஜ.க.,வினரின் தலைக்கேறி தாண்டவமாடுகிறது. அதனால்தான் பெண் மக்களவை உறுப்பினர் என்று கூடப் பார்க்காமல் - செல்வி. ஜோதிமணியை அருவருக்கத்தக்க - அசிங்கமான வார்த்தைகளில் கரு.நாகராஜன் பேசியிருப்பது “மத்தியில் எங்கள் ஆட்சி - மாநிலத்தில் எங்களின் அடிமைகளின் அ.தி.மு.க. ஆட்சி” என்ற அதிகார போதையைக் காட்டுகிறது.

பெண்ணுரிமை பற்றி வாய் கிழியப் பேசும் பா.ஜ.க.,வினர்- கரு.நாகராஜன் பேச்சிற்கு இதுவரை கண்டனமும் தெரிவிக்கவில்லை; அவரது செயலுக்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியும் மத்திய - மாநில அரசுகளுக்குப் பயந்து பத்திரிகைச் சுதந்திரத்தை அடகு வைத்து விட்டு - பெண் குலத்தை இழிவு படுத்திய பா.ஜ.க.,வை ஊக்கப்படுத்தி - உற்சாகப்படுத்தும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆகவே, கழகத் தலைவர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், பா.ஜ.க.,வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் இனிமேல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டி.கே.எஸ் இளங்கோவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.