ஃபீஸ் உடனே கட்டுங்க..! பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய ஸ்டாலின் மகள் செந்தாமரையின் சன் ஷைன் ஸ்கூல்! கொரோனாவுக்கு மத்தியிலுமா?

மு க ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் நடத்தும் சன் ஷைன் பள்ளியில் முதல் தவணை கட்டணம் செலுத்த கூறி பெற்றோர்களுக்கு சர்க்குலர் அனுப்பப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் லாக்டவுன் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் ஏழை எளிய மக்கள் அவதிப்பட்டு அன்றாட உணவிற்கே மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இதன் காரணமாக மாநில அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் நிவாரண உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அதேபோல தமிழக அரசு கடந்த மாதம் வீட்டு வாடகை வழங்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. யாரையும் உடனடியாக வாடகை கேட்டு நிர்பந்திக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில், முக ஸ்டாலின் அவர்களின் மகள் நடத்தி வரும் சன்ஷைன் என்ற பள்ளியில் முதல் தவணை கட்டணம் உடனடியாக செலுத்த சொல்லி பெற்றோர்களுக்கு சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சர்குலரில் ஆன்லைன் வகுப்புகள் முடிவு செய்யப்பட்டு அதற்கான கால அட்டவணை விரைவில் உங்களுக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் முதல் தவணை கட்டணத்தை மே 10ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் செலுத்தக் கோரி பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் நிலவி வரும் லாக்டவுனில் கூட இப்படியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.