சென்னையில் திடீர் பஸ் ஸ்டிரைக்! முடங்கியது மாநகரம்! பயணிகள் தவிப்பு!

சென்னையில் இன்று காலை முதல் மாநகர பேருந்துகள் ஓடவில்லை என்பதால் பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.


சென்னையில் உள்ள பெரம்பூர், மந்தைவெளி, தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இன்று அதிகாலை முதல் இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. அதிகாலையில் பணிக்கு செல்பவர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தும் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை.

இதனால் ஷேர் ஆட்டோக்களில் பயணிகள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். விடிந்த பிறகும் கூட பேருந்துகள் வராத காரணத்தினால் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரியான காரணமும் தெரியாததால் பயணிகள் மத்தியில் கோபமும் குழப்பமும் ஏற்பட்டது.

பேருந்துகள் இயக்கப்படாதது குறித்து காரணத்தை அறிந்த போது திடுக்கிடம் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான ஊதியத்தில் வெறும் 60 சதவீதம் மட்டுமே அவர்கள் கணக்கில் வரவாகியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து ஊழியரகள் இன்று காலை முதல் ஸ்ட்ரைக் செய்து வருகின்றனர். இதன் காரணமாகவே சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை.