அலுவலகத்தில் சுபஸ்ரீ உட்காரும் டேபிளில் ரோஜா மலர் அஞ்சலி! நெகிழ வைத்த ஆபிஸ் நண்பர்கள்!

அதிமுக பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ பணியாற்றும் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் மலர்களால் ஆபிஸ் நண்பர்கள் அஞ்சலி செலுத்தியது கலங்க வைப்பதாக இருந்தது.


அதிமுக பிரமுகர் ஜெயபால் வைத்த பேனரால் தாக்கப்பட்டு சாலையில் விழுந்த சுபஸ்ரீயின் தலையில் லாரி ஏறி இறங்கியது. இதனால் அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த நிலையில் அவர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பிலும் குரல்கள் எழுந்து வருகின்றன.

இதே போல் சுபஸ்ரீ உடலுக்கும் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும் சுபஸ்ரீயின் நண்பர்கள், தோழிகள் சென்னை பள்ளிக்கரனையில் உள்ள அவரது வீட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக சுபஸ்ரீ பணியாற்றிய அலுவலகத்திலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அவரது நண்பர் ஒருவர் ரோஜா மலர்களை வாங்கி வந்து அலுவலகத்தில் சுபஸ்ரீ அமர்ந்து பணியாற்றும் டேபிள் மீது குவித்து வைத்தார். மேலும் சுபஸ்ரீயின் புரபைல் படத்திற்கு குங்குமம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்தோடு எங்கள் அனைவருக்கும் உன்னை மிகவும் பிடிக்கும் சுபா ஆனால் கடவுக்கு ரொம்ப பிடித்துவிட்டது, அதனால் உன்னை அழைத்துக் கொண்டார் என்று அந்த நண்பர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களும் பதிவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.