மசூதியுடன் பள்ளிக்கூடம்! கதவு முன்பு இரும்புக் கம்பி! தப்பிக்க முடியாமல் தீயில் கருகிய 26 குழந்தைகள்! பதை பதைப்பு சம்பவம்!

பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்த சம்பவமானது லிபேரியா நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்கு அமெரிக்க நாடுகளில் லிபேரியாவும் ஒன்றாகும். இதன் தலைநகரான மொன்ரோவியாவிற்கு உட்பட்ட  பயினேச்வில்லே எனும் இடத்தில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி ஆனது அருகிலுள்ள மசூதியை ஒட்டியே அமைந்துள்ளது. பல நூறு மாணவர்கள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். 

நேற்று இரவு மாணவர்கள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் அலறியடித்து கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். அந்த பள்ளியில் அவசர வழி எதுவும் இல்லாததால் மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். சம்பவம் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக 26 குழந்தைகளும் 2 ஆசிரியர்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளனர். மேலும் பல மாணவர்கள் உயிருக்கு போராடும் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

துயர சம்பவத்தை அறிந்த அந்நாட்டின் பிரதமர் ஜார்ஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அவரளித்த பேட்டியில், "26 குழந்தைகள் உயிரிழந்த சம்பவமானது என்னை மிகவும் பாதித்தது. அதனால்தான் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளேன். உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்த ஒருவர் கூறுகையில், "நேற்று இரவு பெரிதளவில் அலறல் சத்தத்தை கேட்டேன். உடனடியாக கண்விழித்துப் பார்த்த போது பள்ளி சிவப்பு நிறத்தில் தோன்றியது. மீண்டும் உற்றுப்பார்த்தபோது பள்ளி தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தேன். குறுகிய வாசலுள்ளதால் மாணவர்களால் எளிதில் வெளிவர இயலவில்லை" என்று கூறி வேதனை அடைந்தார்.

இந்த சம்பவமானது லிபேரியா நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.