தேவர்னா ஒரு கலர்! நாடார்னா அந்த கலர்! தலித்னா வேற கலர்! பள்ளி மாணவர்கள் கைகளில் கட்டப்படும் கயிறு கூறும் ஜாதி!

சாதியை குறிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் கையில் வண்ணக் கயிறு கட்டிக் கொள்ளும் வழக்கமானது பள்ளிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீப காலத்தில் இருந்து பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்கள் சாதியை குறிப்பிடுவதற்காக கைகளில் வண்ண கயிறுகளை கட்டிக்கொள்ளும் சம்பிரதாயத்தை உருவாக்கினர். சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய நிறங்களில் மாணவர்கள் கயிறுகள் கட்டி வந்தனர். இந்தப் பழக்கமானது தென் மாவட்டத்து இளைஞர்களிடையே பெரிதாக பரவி வருகின்றது.

சமீபத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கிராமத்து பள்ளிகளுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது சில பள்ளிகளில் மாணவர்கள் கைகளில் வண்ண கயிறுகளை கட்டி இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, "பள்ளிகளில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் டீம் பிரிப்போம். அதில் எங்கள் சாதியை சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக ஒரு டீமில் வருவதற்கு கைகளில் வண்ண கயிறுகளை கண்டு அடையாளம் காண்போம். இதேபோன்று ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு வேண்டிய வகையில் வண்ண கயிறுகளை கட்டிக்கொள்வர்" என்று பதிலளித்தனர்.

இதனை கேட்ட ஆய்வுக்கு சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதனை முளையிலேயே கிள்ளி எறிவது அவசியம் என்று உணர்ந்தனர். கடந்த மாதம் 31-ம் தேதியன்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அந்த சுற்றறிக்கையில் "எந்த பள்ளியிலும் மாணவர்கள் சாதியை வெளிப்படுத்தும் வகையில் எந்தவித செயல்களிலும் ஈடுபட கூடாது.

அவ்வாறு ஈடுபடும் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர். இதனை பள்ளி நிர்வாகம் மூடிமறைக்க நினைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கமானது பள்ளி மாணவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.