பொங்கலுக்கு மறுநாள் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

ஜனவரி 16ஆம் நாள் ஆன பொங்கலுக்கு அடுத்த நாள் அன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


மாணவர்கள் பொதுத் தேர்வை எவ்வாறு நம்பிக்கையுடன் எதிர்கொள்வது குறித்து பிரதமர் மோடி டெல்லியில் ஜனவரி 16ஆம் தேதியன்று உரையாற்றுகிறார். மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை மாணவர்கள் கண்டுகளிப்பதற்கு பள்ளிகளில் ஏற்பாடு செய்வதற்காக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் ஜனவரி 16 ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற செய்தி பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எப்படி நம்பிக்கையுடன் எதிர்கொள்வது பற்றி ஜனவரி 16ஆம் தேதி அன்று டெல்லியில் பிரதமர் மோடி பேச உள்ளார்.

 விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு சென்று அவரது பேச்சை நேரடியாக பார்க்கலாம். மேலும் மாணவர்கள் வீட்டிலிருந்த படியும் பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் பார்க்கலாம் எனவும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதனால் ஜனவரி 16-ஆம் தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.