அனுமன் ராமபிரானிடம் வைத்திருக்கும் பக்தியை விளக்கும் கதை

ராம பட்டாபிஷேகத்தின் போது,அனுமனின் திறமையையும், அவரது ராம பக்தியையும் உணர்ந்திருந்த சீதாதேவி, அனுமனுக்கு சிறப்பான ஒளி சிந்தும் முத்துமாலை ஒன்றை பரிசாக கொடுத்தார்.


அதனை ஆனந்தத்துடன் வாங்கிக் கொண்டார் அனுமன். பின்னர் அனைவரும் பார்க்கும் விதமாக அந்த முத்துமாலையை பிய்த்து அதில் ஒவ்வொரு முத்தாக கடித்து உடைக்க தொடங்கினார். அது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. சீதாதேவியே ஒரு கணம் அனுமனின் செய்கையைக் கண்டு திகைத்துப் போனார். ஆஞ்சநேயருக்கு பித்து பிடித்து விட்டது என்று கூறி அனைவரும் பேசத் தொடங்கி விட்டனர். ஆனால் அவர் ஏன் அப்படி செய்தார் என்பது ராமருக்கு தெரியாதா என்ன?. அவருக்கு மட்டும் தெரிந்தது அனைவருக்கும் தெரியவேண்டாமா? அதனால் அனுமனை ஏறிட்டு, ‘ஏன் இப்படி செய்தாய்?’ என்று கேள்வி எழுப்பினார் ராமர்.

அதற்கு அனுமன், ‘பிரபு! உங்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ள சீதாதேவி கொடுத்த முத்துமாலையில் உங்கள் இருவரின் உருவமும் இருக்கும் என்று எண்ணித்தான் அந்த முத்துக்களை உடைத்து பார்த்தேன். ஆனால் ஒன்றில் கூட உங்களின் திருவுருவம் இல்லை. அது இல்லாத எந்த பொருளும் எனக்கு தேவையில்லை’ என்று கூறினார்.

இதனை கேட்டதும் அங்கிருந்தவர்கள், ‘இவன் முத்துமாலையை மாசுபடுத்தியதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் விதமாக இப்படி கூறுகிறான். நன்றாக நடிக்கிறான்’ என்று ஆளுக்கொரு விதமாக பேசத் தொடங்கினர். இதனை கேட்டதும் ராமர், ‘அப்படியானால் நீ எப்போதும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பதாக கூறுகிறாய். உனக்குள் நானிருப்பதை அனைவருக்கும் காட்ட முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்.

ஆஞ்சநேயர் வசமாக மாட்டிக் கொண்டதாக அனைவரும் கருதினர். ஆனால் ஆஞ்சநேயர், அனைவரும் திகைத்துப் போகும் செயலை அங்கு செய்தார். தன் நெஞ்சை பிளந்து காட்டினார். அதில் அந்த ராமர், தனது உள்ளம் கவர்ந்த சீதாதேவியுடன், சீதாராமராக அமர்ந்திருந்தார். ராமரின் மீது அனுமன் வைத்திருந்த அன்பை, அங்கிருந்த அனைவரும் உணர்ந்து கொண்டனர்.