ஆஞ்சநேயர் பிறப்பின் இரகசியம் தெரியுமா உங்களுக்கு?

வடமொழியில் ஆனந்த ராமாயணம் என்ற பெரும் காப்பியத்தில் அனுமன் தோற்றம் பற்றிய ஒரு கதை குறிப்பும் உள்ளது.


சுவர்ச்சலை என்ற தேவருலகப் பெண் பிரம்மன் அவையில் நடனமாடிய பொழுது அதில் ஒரு சிறிய தவறு நேர்ந்தது, பிரம்மா அதைக் கண்டு சினந்து அப்பெண்ணை நில உலகில் பருந்தாக பிறக்க சாபமிட்டார். அவள் தன் பிழைக்கு வருந்திப் பொறுத்தருள வேண்டினாள். நீ பருந்தாகப் பறந்து திரிந்து அலையும்போது அயோத்தியில் ராமனின் அவதாரம் நிகழ வேண்டிய காலம் வரும்.

அந்த சமயம் தசரத மன்னன் வேள்வி செய்து பெற்ற பாயாசத்தினை மேல் மாடத்தில் வைத்து தன் மனைவியர்க்குப் பங்கிட்டு அளிப்பான். அப்போது நீ அதிலிருந்து ஒரு துளியை கவர்ந்து அஞ்சன மலையில் வீசி எறிந்தால் சாபம் நீங்கும் என்றார்.

அவ்வாறே சுவர்ச்சலை செய்யவும் அவள் வீசி எறிந்த துளி, அம்மலையில் தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனா தேவி வாயில் விழுந்தது என்றும் அதன் காரணமாகப் பிறந்தவர் அனுமன் என்றும், நால்வர் பிறப்போடு சேர்ந்த பாயஸ அன்னமே ராமதூதன் பிறப்புக்கும் காரணமானதால் அனுமனும் ராமன் தம்பியே எனவும் கூறுகிறது ஆனந்த ராமாயணம்.

மற்றொரு கதையும் உண்டு. திரேதாயுகத்தில் வாழ்ந்த கேசரி என்பவனுக்கு வெகு நாட்களாக மழலைச் செல்வம் இல்லாததால் அவன் சிவபெருமானை நோக்கி, காற்றையே உணவாகக் கொண்டு கடும் தவம் இருந்தான். சிவபெருமான் என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, அவனும் ’இறைவா! எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும். அவன் புத்திசாலியாகவும் யாரும் வெல்ல முடியாத தன்மையுடன் மரணம் இல்லாதவனாகவும் விளங்க அருள வேண்டும்’ என்றான்.

சிவபெருமான், ”பக்தனே!, இப்பிறவியில் உனக்கு ஆண் மகன் பிறக்கும் பாக்கியம் இல்லை. உனக்கு பெண் பிள்ளை பிறந்து அவளுக்கு நீ கேட்ட வரத்தைப் போலவே ஆண்பிள்ளைப் பிறப்பான்” என வரமளித்தார். கேசரிக்கு பெண் குழந்தையாக அஞ்சனை பிறந்தாள். அவளை ஒரு வானர வீரனுக்கு மணமுடித்துக் கொடுத்தான் கேசரி. அஞ்சனை தனக்கு ஒரு குழந்தை இல்லை என மிகுந்த வருத்தம் அடைய, தர்மதேவதை அவளிடம் வந்து வேங்கட மலை சென்று நீ பரந்தாமனை நோக்கி தியானம் செய்தால் குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்று கூற அவளும் அவ்வாறே வாயுவையே உணவாகக் கொண்டு பரந்தாமனை எண்ணி கடும் தவம் செய்தாள். அதனைக் கண்ட வாயு பகவான் மனமிரங்கி, அஞ்சனைக்கு உதவும் எண்ணத்தில், அவள் கரங்களில் கனிகளைப் போட அவளும் அது இறைவனின் கருணையே என்றெண்ணி உண்டாள்.

அவள் தவத்தை காண ஈசனும் தேவியும் வந்தபோது அங்கே ஆண் குரங்கும், பெண் குரங்கும் ஒன்றோடு ஒன்று பிணைந்து மகிழ்ந்திருந்தன. அதனைக் கண்ட ஈசனுக்கும் தேவிக்கும் ஆசை மேலிட, அவற்றைப் போலவே மந்திகளாகி மகிழ்ந்திருந்தனர். அப்போது அவர்களிடம் இருந்து தேஜஸ் வெளிப்பட்டது. அது வீணாகி விடக்கூடாது என்று எண்ணிய வாயுதேவன் அதனை தன் கரங்களில் ஏந்தி அஞ்சனையின் கரங்களில் விழச்செய்தார். அதனை அவள் எப்பொழுதும் தன் கரங்களில் விழும் கனிகளென எண்ணி உட்கொண்டாள். உடனே அவள் உடலில் மாற்றங்கள் ஏற்ப்பட இது முறையற்ற கருவென எண்ணித் திகைத்து நின்றாள்.  


அப்பொழுது ஆசிரீரி, ’அஞ்சனை! வருந்தாதே, உன் வயிற்றில் வளர்வது அந்த மகேஸ்வரனின் கருவே. உனக்குப் பிறக்கும் ஆண் குழந்தை வாயுபகவானின் தொடர்பால் மிகுந்த பலவானாகவும், ஆற்றல் மிகுந்தவனாகவும், ஞானியாகவும், காற்றைப் போல் சஞ்சரிக்கும் வல்லமை உடையவனாகவும் இருப்பான் என்றது. அவ்வாறே தேஜஸ்வியான ஓர் ஆண் குழந்தை பிறந்து அதற்கு ஆஞ்சநேயன் என பெயரிட்டாள் என்று கதை உண்டு.