வைகோ மகன் துரை வைகோவை அரசியலுக்கு வரச்சொன்னாரா ஸ்டாலின்?

மன்னராட்சி என்பதுதான் இப்போது வேறு ஒரு வகையில் மகன்கள் ஆட்சியாக மாறி நடந்துகொண்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வாரிசு அரசியல்தான் இப்போது தமிழகத்தின் ஸ்பெஷல்.


கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்பமும் அரசியலில்தான் கஷ்டப்பட்டு குப்பை கொட்டுகிறது. தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் நாட்டுக்காக அர்ப்பணித்திருக்கிறார் நல்லவர் ஓ.பன்னீர்செல்வம். தன்னுடைய பிள்ளைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார் ராமதாஸ். விஜயகாந்த் கட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் அவரது குடும்பம் மட்டும்தான். 

இப்படி ஒட்டுமொத்தமாக வாரிசு அரசியல் நடக்கும்போது, திராவிடப் பாணியில் வந்த வைகோவின் ம.தி.மு.க. மட்டும் சும்மா இருக்குமா? வைகோவின் மகன் துரை வையாபுரியை கட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்றுதான் வைகோ வெளியே வந்தார். ம.தி.மு.க.வில் வாரிசு அரசியல் வரப்போகிறது என்றுதான் நாஞ்சில் சம்பத் வெளியே வந்தார். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இப்போது துரை வைகோ என்று பெயரை மாற்றிக்கொண்ட துரை வையாபுரி கட்சி வேலைகளை கவனிப்பதில் செம பிஸி.

என்னாங்க வைகோ, நீங்களும் இப்படி வாரிசு அரசியல்ல இறங்கலாமா என்று சில நெருங்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் விசாரித்தார்களாம். அவர்களிடம், ‘எனக்கு அப்படியொன்னும் ஆசை இல்லை. நம்ம ஸ்டாலின் தம்பிதான் உங்க பையனை உள்ளே கொண்டுவாங்க, அப்பத்தான் கட்சி தொண்டர்களுக்கு நம்பிக்கை வரும்னார், நானும் செஞ்சுட்டேன்’ என்கிறாராம்.

அப்படியா சொன்னாரு ஸ்டாலின்?