ஸ்டாலின் தவறாகப் பேசுகிறார். முன்னாள் எம்பி.கார்வேந்தன் கடும் பாய்ச்சல்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இப்போது பா.ஜ.க.வில் இருக்கும் முன்னாள் எம்.பி. கார்வேந்தன், ‘பெண்கள் சொத்துரிமை சட்டம் குறித்து அண்மையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கருத்து தவறானது’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கையில், ’இப்போது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. பெண்களுக்கு சொத்து குறித்து 1863ல் சிவகங்கையை சேர்ந்த கட்டம்மை நாச்சியார் சிவகங்கை மகாராஜா பேரில் தாக்கல் செய்தது தான் முதல் வழக்கு. 1929 பிப்.,21ல் பிரிட்டிஷ் இந்திய அரசு ஹிந்து குடும்ப சொத்து குறித்து சட்டத்தை கொண்டு வந்தது.

குடும்பத்தலைவர் எந்த ஆவணமும் எழுதி வைக்காவிட்டால் அவரது மனைவியை தவிர மற்ற வாரிசுகள் சமபங்கு அடைவார்கள் என்பது அந்த சட்டம். விதவை மனைவிக்கு சொத்து கிடையாது என்பதால் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

1937ல் பெண்கள் சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தது. அதில் இறந்த குடும்பத்தலைவரின் மனைவி, மகனின் விதவை மனைவி, பேரனின் விதவை மனைவி ஆகிய மூவருக்கும் சொத்தில் பாத்தியம் தரப்பட்டது. சுதந்திரத்திற்குப்பின் 1956ல் உருவாக்கப்பட்ட இந்திய வாரிசுரிமை சட்டம், இறந்துபோன குடும்பத்தலைவரின் பொதுக்குடும்ப சொத்தில் அவருடைய பாகத்தில் மட்டும் மனைவி, பெண் வாரிசுகள், ஆண் வாரிசுகள் சமமாக பாத்தியப்பட்டவர்கள் என கூறியது.

இதில் ஆண் வாரிசு 3 தலைமுறைக்கு பாத்தியம் கோரலாம் என இருந்தது. இதற்கு நாடு முழுதும் பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆந்திராவில் 1986ல் என்.டி.ராமராவ் பெண்கள் சொத்துரிமை சட்டத்தை கொண்டு வந்தார். அதில் திருமணமாகாத பெண்களுக்கு தகப்பனாரின் சொத்தில் சகோதரர்களுக்கு சமமான பாகம் தரப்பட்டது.

அதன்பின் 1989ல், அதற்கு பின் திருமணமாகிற பெண்களுக்கும் சகோதரர்களுக்கு சமமான பாத்தியம் என கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார். இந்த சட்டங்களில் திருமணமான, திருமணமாகாத என பிரிவினை இருந்தது. மத்திய சட்டத்தில் இருந்த பிரச்னையை தீர்க்க 9.9.2005ல் ஹிந்து சொத்துரிமை திருத்த சட்டம் பிரிவு 6ஐ கொண்டு வந்தது. இந்த திருத்தப்படி, பெண்கள் பிறப்பால் பொது குடும்ப சொத்தில் கூட்டு பாகஸ்தர்கள் ஆகி விடுகின்றனர். இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகின. ஒவ்வொரு நீதிமன்றமும் சட்டத்தை ஒவ்வொரு கோணத்தில் ஆய்வு செய்து தீர்ப்பளித்தன.

சட்டம் வந்தபோது குடும்பத்தலைவர் உயிரோடு இருந்தால் தான் பாகம் பெற முடியும், பெண் வாரிசுகள் உயிருடன் இருந்தால் தான் உரிமை கோர முடியும் என பல நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கலாகின. அந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து விசாரித்து தான் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு ஆக.,11ல் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு விவாதத்தின்போது ஆந்திர அரசு கொண்டு வந்த சட்டம் குறித்து தான் விரிவாக விவாதிக்கப்பட்டது. திருமணம் ஆன, ஆகாத என்ற பிரிவினை, சட்டம் அமலுக்கு வந்த 9.9.2005 தந்தை உயிருடன் இருக்க வேண்டுமா, பெண் வாரிசு உயிருடன் இருக்க வேண்டுமா என்பவை குறித்து தான் விவாதிக்கப்பட்டது. கருணாநிதி கொண்டு வந்த தமிழக சட்டம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. 

எனவே தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறிய, 1929ல் பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்ற ஈ.வெ.ரா.,வின் கோரிக்கையின் படி, 1989ல் கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தை 31 ஆண்டுகளுக்கு பின் உச்சநீதிமன்றம் ஊர்ஜிதம் செய்துள்ளது' என்பது தவறு. தற்போது, தந்தை உயிருடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை, பெண் வாரிசு உயிருடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தால் 6 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பழைய சட்டங்களில் இருந்த குளறுபடிகளை நீக்கியுள்ளது. ஹிந்து குடும்ப சொத்துகளில் பெண்கள் சட்ட ரீதியாக பங்கு பெற வழி செய்துள்ளது என்று கூறியிருக்கிறார்.