கூட்டணிக் குழப்பம்... வேட்பாளர் தேர்வு சிக்கலில் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் பட்டியலை அறிவித்த கையோடு, தேர்தல் பிரசாரத்துக்கும் கிளம்பியே விட்டார். ஆனால், இன்னமும் எதுவுமே முடியாத குழப்பத்தில் தவிக்கிறார் ஸ்டாலின்.


திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , விசிக உள்ளிட்ட கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. ஒரே தொகுதியை பல கட்சிகள் கேட்பதால் இந்த இழுபறி என்கிறார்கள்.

வெற்றிவாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டு, ஒப்பேறாத தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் தள்ளிவிட திமுக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ‘’கேட்ட எண்ணிக்கையில் சீட்டுதான் தரவில்லை. கேட்கிற தொகுதிகளையாவது தரலாம்தானே’’ என திமுகவிடம் மல்லு கட்டிக் கொண்டிருக்கின்றன இந்த கட்சிகள்.

10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என ஸ்டாலினே கூறியிருந்தார். ஆனால் அதைக் கூட செய்ய முடியாதபடி அறிவாலய நிலைமை களேபரமாக இருக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி தீக்குளிக்க முயற்சிப்பது வரை உடன்பிறப்புகள் ரகளையில் ஈடுபட்டு வருவது ஸ்டாலினை கோபமடையச் செய்துள்ளது. இதுபோக கடைசி நேரத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆளாளுக்கு துண்டுச் சீட்டுக்களை தருவதில் செம கடுப்பாகிவிட்டாராம்.

ஒவ்வொரு தொகுதிக்கும் பலத்த போட்டியிருக்கும் நிலையில் சீட் கிடைக்காதவர்கள் உள்ளடி வேலையில் இறங்கிவிட்டால் என்ன செய்வது என்கிற கவலை வேறு அவரை வாட்டுகிறதாம். இதன் காரணமாக கடந்த இரண்டு, மூன்று தினங்களாக ஸ்டாலின் செம டென்ஷனில் இருப்பதாகக் கேள்வி.

இதனிடையே இறுதி வேட்பாளர் பட்டியலை தனது இஷ்ட தெய்வத்திற்கு முன்பு வைத்து பூஜை செய்த பின்னரே அதனை வெளியிட வேண்டுமென ஸ்டாலின் மனைவி துர்கா உத்தரவே போட்டிருக்கிறாராம். இப்படியெல்லாம் இருந்தா எப்படிங்க..?