ஸ்ரீசாயி பாபாவின் பக்தர் சந்தோர்கர் பற்றி தெரியுமா?

ஷீரடி சாயிபாபாவினுடைய பிரார்த்தனைகளில் அன்னதானமே முக்கியமானது. இதனை விளக்கும் ஒரு சம்பவம், சாய்சத் சரிதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


பாபாவின் பக்தரான சந்தோர்கர், தினந்தோறும் அதிதிகளுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் பாபாவிடம் ‘‘நான் தினந்தோறும் காக்கைகளுக்கு உணவு வைத்துவிட்டு அதிதிகளுக்காக காத்திருப்பேன். ஆனால். அவ்வப்போது காக்கைகள் வருவதே இல்லை. ஏன் பாபா இவ்வாறு நடக்கிறது’’ என்று சந்தோர்கர் வெகுளித்தனமாகக் கேட்டார்.

’’நீ ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்?’’ என்று அவரிடம் திரும்பிக் கேட்டார் பாபா.

’’நமது சாஸ்திரங்களும், வேதங்களும் இப்படித்தானே பாபா சொல்லி இருக்கிறது, அதைத்தான் நான் கடைபிடிக்கிறேன்என்றார் சந்தோர்கர்.

’’நானா, சாஸ்திரங்களில் தப்பில்லை, வேதங்களிலும் குறையில்லை. ஆனால். அவற்றின் உண்மைப்  பொருளை சரியாக நீ புரிந்துகொள்ளாமல் இருக்கிறாய். அதனால்தான் அதிதிகளுக்காக தினமும் காத்திருப்பதாக விசனப்பட்டுக் கொள்கிறாய்.

அதிதி என்பவன் யார்?

மனித உருவத்தில் மட்டுமல்லாமல் பறவைகள், விலங்குகள், பூச்சிகள் உருவத்தில் இருப்பவைகூட அதிதிகள்தான். நீ உணவளிக்கும்போது அதனை உண்பதற்காக பசியுடன் யார் அல்லது எது வந்தாலும் அது அதிதிதான். நிறைய காக்கைகள் வரும்போது நிறைய அன்னத்தை அவற்றிற்கு வழங்கு. உயிருள்ள எந்த ஜீவன் வேண்டுமானாலும் சாப்பிடட்டும் என்று நினை. அப்படிச் செய்தால் அதிதிகளுக்கு உணவளித்த புண்ணியம் உனக்குக் கிடைக்கும்’’ என்று பாபா விளக்கமளித்தார். மனித ரூப அதிதிகளுக்காகக் காத்திருக்காமல், பசியோடு, உணவுதேடி வரும் எந்த ஜீவனுக்கும் அளிப்பதே அன்னதானம் என்பதைப் புரிந்துகொண்டார் சந்தோர்கர்.