ஸ்ரீ சாயிநாதனுக்குப் பிடித்தமான அன்னதான விதிமுறைகள் என்ன?

அன்னதானம் செய்தால் அடுத்து வரும் ஏழு பிறப்புகளுக்கும் தர்மம் தலைக்காக்கும் என்றும், சந்ததிகளை வளமாக வாழவைக்கும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பகவான் கிருஷ்ணருக்கு அவல் கொடுத்த காரணத்தாலே, பொன்னாலான நகரத்தையே உருவாக்கிக் கொடுத்தார். அதனால் அன்னதானம் உலகிலுள்ள மற்ற தானங்களை விட மிகச் சிறந்தது. சகல செளபாக்கியங்களையும் தரவல்லது. பாவங்களைப் போக்கவல்லது.


அன்னதானம் செய்வதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன.

முதலில் உணவை தெய்வத்தின் பாதங்களில் படைத்து, அதன்பிறகே மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டும். அனைவருக்கும் உணவளித்தபிறகே தானம் அளிப்பவர் உண்ண வேண்டும்.

பகவான் பாபாவுக்கு முதல் உணவாக நைவேத்தியம் படைப்பது அதிமுக்கியம். ஏனென்றால் பாபா பசியாறினால், உலகிலுள்ள எத்தனையோ உயிர்களின் பசி தீரும். அவர் இரவும் பகலும் நம்முடன் இணைந்தே இருக்கிறார். அதனால் அவர் பசியைப் போக்கவேண்டியது முதல் கடமை. இதனால் நாம் படைக்கும் உணவில் இருக்கும் குற்றம், குறை நீங்குவதுடன் தேவைக்கேற்ப பெருகும் தன்மையும் ஏற்படும் என்பதை பாபாவின் பக்தர்கள் நன்கு அறிவார்கள்.

அதனால் முதலில் பாபாவுக்குப் படைத்து, அதன்பிறகு அவரது குழந்தைகளுக்குப் படைக்க வேண்டும். பாபாவுக்குப் படைத்த உணவு அமிர்தம் போன்று மாறி, உண்பவருக்கு ஆரோக்கியமும் ஆனந்தமும் தருவதை கண்கூடாக காண இயலும். அதனால் ஒருபோதும் நாம் தனித்து உண்பதில்லை என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டு. நம்மிடம் இருப்பதை முடிந்த வரை பாபாவின் குழந்தைகளுடன் பகிர்ந்துகொள்வோம்.

வஸ்திரங்களையோ, பாத்திரங்களையோ தானமாக அளிக்கும்போது, அதனை  தானமாகப் பெறுபவருக்கு, அதாவது அதனை  வாங்குபவர் தகுதியுள்ள நபர்தானா என்று பரிசீலிக்க வேண்டிய அவசியம் உண்டு.  ஆனால் அன்னதானம் செய்வதற்கு மட்டும் இந்த சிந்தனை தேவையில்லை. ஆம், பணக்காரர், ஏழை என்று அனைவருக்கும் பசி உண்டு. அதனால் இந்த உலகிலுள்ள அனைவருக்கும் அன்னமளிக்கலாம்.