மீண்டும் இலங்கை படை அட்டூழியம்..! தமிழக மீனவர் முகத்தில் துப்பாக்கி சூடு. கச்சத்தீவு பயங்கரம்

கச்சத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்கள இனவாத இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஒரு மீனவர் காயமடைந்துள்ளார். மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.


இராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று வழக்கம்போல வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத் தீவு அருகே இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதை மறுத்துப் பேசியதால் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஜேசு எனும் மீனவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. அவருடைய கண்ணுக்கு அருகில் குண்டு பாய்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். .

” இந்தத் தாக்குதலில் மீன்வர்களுக்கு பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தியக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சிங்களப் படையினர் நமது எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பதை சகித்துக்கொள்ள முடியாது. இது இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இலங்கை அதிபர், பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்பட்ட உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், அவர்களிடம் சிங்களப் படையினரின் அத்துமீறல்கள் குறித்து இந்திய அரசு தெரிவிப்பதும்,

அதற்கு இனி வரும் காலங்களில் மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துவதாக இலங்கை அரசு தரப்பில் உறுதியளிக்கப் படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத இலங்கை அரசு, இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது மன்னிக்க முடியாததாகும்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்காக தில்லியில் உள்ள இலங்கை தூதரை இந்திய அரசு அழைத்து கண்டிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று பா.ம.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.