ஆஞ்சநேயருக்கு செந்தூரம் ஏன் சாத்துகிறோம் தெரியுமா? அதன் பலன் என்ன புரியுமா?

சீதாதேவி நெற்றியில் செந்தூரம் இடுவதைக் கண்ட அனுமன் அதன் காரணத்தைக் கேட்க எண்ணி, ’தாயே, இந்த செந்தூரம் உங்களுக்கு முகப்பொலிவு தருகிறது


நெற்றியில் இட்டதோடு வகிட்டிலும் இடுவது ஏன்?’ என்றான். சீதாதேவி அதற்கு அனுமனே!, ஒரு பெண்ணின் நெற்றித்திலகம் அவள் சுமங்கலி என்பதையும் மாங்கல்ய பலமும், என்றும் தன் தலைவனை நீங்காமலும் பிரியாமல் இருக்க அந்த மகாலட்சுமியானவள் அருள்புரிவாள். அதோடு வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அவள் எவ்வாறு திருமாலின் மார்பில் நித்யவாசம் செய்கிறாளோ அதே போல நானும் என் தலைவனை நீங்காது இருக்கவே இப்படிச் செந்தூரம் தரிக்கிறேன் என்று கூறினாள்.

அதைக் கேட்டதும், செந்தூரம் அணிந்தால் சீதாதேவி மட்டுமா ராமபிரானைப் பிரியாது இருப்பாள்?  அவ்வாறு அணிந்தால் தானும் ராமனைப் பிரியாதிருக்கலாமே என்றெண்ணி அதைத் தேடிச் சென்றான்.

அதை எடுத்து வந்து சீதையைப் போலவே தானும் நெற்றியில் வைத்துப் பார்க்க, சீதையின் அழகு போல் தனக்கு அழகு தரவில்லை என்று நினைத்து, ‘ஒரு வேளை சிறு திலகமாக வைத்ததால் அழகாக இல்லையோ – என எண்ணி பெரியதாக இட்டுக்கொள்ள, அப்போதும் திருப்தி ஏற்படாமல் முகம் முழுவதும் பூசிக் கொண்டான். அப்போதும் திருப்தி வராது, அதனை தன் உடல் முழுவதும் பூசிக் கொண்டான். இதுவே அனுமனுக்கு செந்தூரம் சாத்தும் வழக்கம் வந்த காரணம்.

சிந்தூரம் அணிந்த ஆஞ்சநேயரே வணங்குவதும் தரிசிப்பதும் சிறப்பான சகல நன்மையும் தரும் என்பது நிச்சயம்