ஆடி முதல் வெள்ளி மகிமை தெரியுமா? இன்று அம்பாளுக்கு செய்ய வேண்டியது இதுதான்!

பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும்.


இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன. இம்மாதத்தில் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும்.

ஆடி மாதத்தைபீடை மாதம்என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

அம்மனுக்கு பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

அம்மனை வழிபடும் போது மறக்காமல்லலிதாசகஸ்ர நாமம்சொல்ல வேண்டும்.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.

அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீங்காத செல்வம் மற்றும் சகல நன்மைகளையும் பெறலாம் என்பது ஐதீகம்.

ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி விஷ்ணு பகவானின் மனைவியான மகாலட்சுமிக்கு உரியது. இந்த கடைசி வெள்ளிக்கிழமையின் போது தான் வரலட்சுமி பூஜை நடைபெறும். இந்த பூஜை திருமணமான பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. திருமணமான பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரித்து, நீண்ட நாட்கள் சுமங்கலியாக இருப்பதற்கு, ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையின் போது நோன்பு இருந்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள்.