ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் கட்டியதாக நம்பப்படும் பல நூறு பகவதி கோயில்களில், குருவாயூரிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் தெற்குப்புறமாக அரபிக்கடலுக்கருகில் உள்ள ‘கொடுங்கலூர் பகவதி கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தீராத நோய்களை தீர்க்க இந்த அம்மனுக்கு மஞ்சள்பொடி அர்ச்சனை செய்தால் போதும்!

கொடுங்கலூர் பகவதி அம்மனுக்கு, லோகாம்பிகை, கன்யகாதேவி என்று வேறு பெயர்களும் உண்டு. மனோதரி என்பவர் ஆதிசக்தியிடம் சென்று, கன்யகாதேவியிடம் இருந்து தனது அசுரக் கணவனைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றாள். ஆதி சக்தியும் தனது உடலிலிருந்து வெளியான சில வியர்வைத் துளிகளை மனோதரியிடம் கொடுத்து, ‘இந்தத் தீர்த்தத்தைப் பயன்படுத்திக் கொள்’ என்று சொல்லி அனுப்பினார்.
ஆனால் அதற்கு முன்பாகவே கன்யாதேவி, அசுரனை கொன்றுவிட்டாள். இதனால் ஆத்திரமடைந்த மனோதரி, தன்னிடம் இருந்த தீர்த்தத்தை கன்யாதேவி மீது தெளிக்க அவளது உடல் வெப்ப நோயால் பாதிக்கப்பட்டது. பின்னர் சிவபெருமானால், கன்யாதேவியின் வெப்ப நோய் நீங்கியது. மனோதரிக்கு இத்தலத்தில் சன்னிதி உள்ளது. அவளே வசூரி மாதா என்று அழைக்கப்படுகிறாள்.
இந்தக் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் மேற்குப்புறமாக வசூரி மாதா வீற்றிருக்கிறாள். வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டபடி தனது இரு கரங்களையும் மடிமீது வைத்து அமர்ந்திருக்கும் மிக சிறிய வடிவ ’வசூரி மாதா’ கொடுங்கலூர் பகவதிக்கும் மூத்தவளாம்.
பெரியம்மைக்கு மலையாளத்தில் வைசூரி என்று பெயர். வைசூரியை விரட்டியடிப்பள் என்பதால் வைசூரி மாதா, அது மருவி வசூரி மாதா என்று அழைக்கப்படுகிறாளாம். மேற்கூரை இல்லாத சந்நிதி இவளுக்கு. வசூரி மாதாவுக்கு மஞ்சள்பொடி அர்ச்சித்து வேண்டிக்கொண்டால் பெரியம்மை, தட்டம்மை, காலரா உள்ளிட்ட உஷ்ண நோய்கள் விலகி இறங்குமாம். வசூரி மாதாவை அர்ச்சிக்க பக்தர்கள் தூவும் மஞ்சப்பொடி சேர்ந்து சேர்ந்து ஒரு சிறு மஞ்சள் நிற மலையாக இருப்பதை காணலாம். இந்த மலையை வசூரி மலா என்று அழைக்கிறார்கள்.
மிகுந்த சக்தி வாய்ந்த வசூரி மாதா இங்கு கொலுவிருப்பதால், திருச்சூரில் தொற்றுநோய் இறப்பு நிகழ்ந்ததில்லை என்று நம்பப்படுகிறது. நாயர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இந்த சன்னதியில் பூஜைகளை செய்கிறார்கள். அர்ச்சித்த மஞ்சளே பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.