இந்த ஒரு லிங்கத்தை வணங்கினால் கோடிக்கணக்கான லிங்கங்களை வழிபடும் நன்மை! எப்படி தெரியுமா?

சிவலிங்க வகைகளில் கல் லிங்கம், மண்லிங்கம், சொர்ணலிங்கம், வெள்ளி லிங்கம், மரகத லிங்கம், சந்திரகாந்தக்கல் லிங்கம், சிவலிங்கம், ஸ்படிக லிங்கம் என்று பலவகை இருந்தாலும் மிகவும் போற்றப்படுவது பாதரச லிங்கம்.


கோடிக்கணக்கான லிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களை விட ஒரு பாதரசலிங்கத்தினை வழிபடுவதன் மூலம் பல மடங்கு பலன்களை எளிதில் அடைய முடியும். யார் வேண்டுமானாலும் பாதரச லிங்கத்தினைப் பூஜித்துப் பரமபதத்தை அடையலாம். பாதரசலிங்கத்தை விதிப்படி ஒரே ஒருமுறை பூஜிப்பவர்கள் கூட சூரிய - சந்திரர்கள் இருக்கும் வரை அளவில்லாத சுகத்தையும் ஆரோக்கியமான நல்வாழ்வையும் பெற முடியும்.

கல்லாலான சிவலிங்கத்தைப் பூஜிப்பதைவிட கோடி மடங்கு நற்பலன்களை தங்கம் வேயப்பட்ட சிவலிங்கத்தை வழிபடுவதால் கிடைக்கும். அதைவிட பன்மடங்கு பல ரத்தினங்கள் பதித்த லிங்கத்தை வழிபடுவதால் கிடைக்கும். ஆனால் அதை விட பலப்பல மடங்குகள் பலன்களை பாதரச லிங்கத்தினைத் தரிசித்து வழிபடுவதால் பெற இயலும் என்று கூறுகின்றனர்.

நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம்வளம் மற்றும் நம் வாழ்வில் வேண்டுவதைப் பெறுவதற்கான ஒரே சிறந்த வழி பாதரசலிங்கத்தை வழிபடுவதால் கிட்டும் என்கிறது வேதநூல். தினந்தோறும் அனுஷ்டானங்கள் மேற்கொண்டு, பூஜை, அர்ச்சனை, மந்திரங்கள் ஜபித்து, ஆரத்தி முதலிய சேவைகள் செய்து ஆராதிக்கக் கூடியவர்கள் மட்டும் பாதரச லிங்கத்தை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

சென்னை வட திருமுல்லைவாயில் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் கோயிலில் பாதரச லிங்கத்தை தரிசிக்கலாம். கோயம்புத்தூரில் அமைந்துள்ள தியானலிங்கம் (ஈஷா) வழிபாட்டுத் தலத்திலும் பாதரசலிங்கம் வழிபாடு நடைபெறுகிறது. பாதரச லிங்கத்தை வழிபடுவதால் மனம் அலைபாயாது மற்றும் நலமுடனும் வளமுடனும் வாழலாம். பாதரசலிங்கம் எழுந்தருளியுள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் இறுதிக்காலத்தில் எம வேதனைகள் இன்றி சுகமுடன் முக்தி கிட்டும்.

பெண்களை வக்கிர எண்ணங்களுடன் பார்த்தல், மனத்திற்குள் ரசித்தல் போன்ற குணங்கள் பாதரசலிங்கத்தை வழிபடுவதால் நீங்கும். மன அழுக்குகள் நீங்கித் தூய்மையை ஏற்படுத்தும் சக்தி அதற்கு உண்டு. எனவே பாதரசலிங்கம் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச் சென்று முடிந்த அளவு அங்கு அமர்ந்து தியானம் செய்து வழிபட்டால் என்றும் வாழ்வில் சுகம் காணலாம்.